சேலத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 8) சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் அஸ்தம்பட்டியில் சிஎஸ்ஐ நர்சரி, பிரைமரி பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சேலத்தை அடுத்த வீராணத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2013ம் ஆண்டு இந்தப் பள்ளியின் நிர்வாகியும், பாதிரியாருமான ஜெயசீலன், சிறுமியை கதை சொல்வதாகக்கூறி, தனி அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த அறையில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கைது செய்யப்பட்ட ஜெயசீலன், பின்னர் பிணையில் வெளியே வந்தார்.
இந்த வழக்கின் விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, ஜெயசீலனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை (மார்ச் 8, 2019) தீர்ப்பு அளித்தார்.