சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜூம் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரனை என்ற பெயரில் கொடூரமாகத் தாக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நேரத்தில் இருவரும் மரணமடைந்தனர். உயர்நீதிமன்ற உத்தரவுபடி அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டியினர் விசாரித்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்களான பாலகிருஷ்ணன் ரகுகணேஷ் உள்ளிட்ட 10 பேர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்தனர். பிறகு அந்த வழக்கு சி.பி.ஐ.யின் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணையிலிருக்கிறது.
இதனிடையே அடுத்த பயங்கரமாக சாத்தான்குளத்திற்குட்பட்ட பேய்க்குளத்தின் துரை என்பவரை ஒரு வழக்கு சம்பந்தமாகக் கைது செய்து வந்த போலீசார் அவர் இல்லாததால் அவரது தம்பியான மகேந்திரனை சாத்தான்குளம் காவல்நிலைய எஸ்.ஐ.யான ரகுகணேஷ் மற்றும் போலீசார் அதிகாலை 2 மணியளவில் பிடித்துச் சென்றனர். காவல் நிலையத்தில் விசாரணை என்ற வகையில் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார் மகேந்திரன்.
பின்னர் துரை ஆஜரானதையடுத்து மகேந்திரன் விடுக்கப்பட்டார். எஸ்.ஐ.ரகுகணேஷ் உள்ளிட்ட போலீசாரால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த மகேந்திரன், கடந்த ஜூன் 11ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 13ம் தேதியன்று உயிரிழந்தார். இறப்பதற்கு முன் மகேந்திரன் மருத்துவமனையில் தான், தாக்கப்பட்டது குறித்து வாக்குமூலம் கொடுத்திருக்கிறாராம்.
இதனிடையே மகேந்திரனின் தாயார் வடிவு அம்மாள், தன் மகன் எஸ்.ஐ. ரகுகணேஷ் உள்ளிட்ட போலீசாரால் தாக்கப்பட்டதால் மரணமடைந்தார். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டியின் விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதனடிப்படையில் சி.பி.சி.ஐ.டி.யின் டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து வடிவு அம்மாளிடம் விசாரணை நடத்தினர். அதன் பின் மகேந்திரனின் சகோதரி சந்தனமாரி, சகோதரர் துரையிடம் துருவித்துருவி விசாரித்தார்.
பேய்க்குளத்திலுள்ள வருவாய் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு இவர்களிடம் விசாரித்து முடித்த சி.பி.சி.ஐ.டி.யின் இன்ஸ்பெக்டர் சபீதா, பின்பு மகேந்திரனின் உறவினர்களான இசக்கியம்மாள் பெருமாள், கனகவல்லி பார்வதி உள்ளிட்டோர்களிடமும் விசாரணை நடத்தினார்.
மேலும் மகேந்திரனைப் போலீஸ் அழைத்துச் செல்லப்பட்ட போது பார்த்த சாட்சிகளான சவேரியார்புரம் முத்துக்கிருஷ்ணன். மீரான்குளம் யாக்கோபுராஜ் உள்ளிட்டோர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 6 மணி நேரமாக விசாரிக்கப்பட்ட இந்த விசாரணை அனைத்தும், வீடியோ பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் போது உச்சநீதிமன்ற வழக்கறிஞரான ராமசாமி மற்றும் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.
சர்ச்சைக்குள்ளான சாத்தான்குளம் காக்கிகளை விடாது கருப்பு போல.