Skip to main content

சாத்தான்குளம் படுகொலை குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யாதது ஏன்? மதுரை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!!

Published on 29/06/2020 | Edited on 30/06/2020
sathankulam incident... madurai struggle

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவுசெய்ய வலியுறுத்தி மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.  

சாத்தான்குளம் காவல்துறையினர் நிகழ்த்திய ஜெயராஜ்-பென்னிக்ஸ் இரட்டைப் படுகொலைக்கு நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை என தமிழக அரசு அறிவித்திருப்பது, அடித்துக் கொன்ற காவல்துறையினரைக் காப்பது, குற்ற விசாரணையை தாமதித்து, குற்ற ஆவணங்களை அழித்து, சாட்சிகளைக் கலைக்கும் நோக்கம் கொண்டது. மொத்தத்தில் தமிழக அரசின் அறிவிப்பு மோசடியானது, மக்களை ஏமாற்றுவது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்-நீதிபதிகள் மீதான தாக்குதல், வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் கொலை, ஸ்டெர்லைட் படுகொலை என  சிபிஐ எடுத்துக் கொண்ட எந்த வழக்கிலும் முறையான விசாரணையோ, குற்றவாளிகள் மீதான கைது நடவடிக்கையோ இல்லை. குற்ற வழக்கு வழக்கு விசாரணையில் சிபிஐயைவிட தமிழக சிபிஐடி போலீசார் அனுபவம் மிக்கவர்கள். நீதிமன்ற கண்காணிப்பில் தமிழக  சிபிஐ சிறப்புக் குழு விசாரணையே போதுமானது. எந்த விசாரணை என்றாலும் அனைத்துக்  குற்றவாளிகள் மீதும் கொலை வழக்கும், கைதும் மிக அவசியம்.

கு.வி.ந.ச. பிரிவு 174 - சந்தேக மரணத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அடித்துக் கொன்றவர்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் கொடுத்தபின், கொலை வழக்கு உடனே பதிவு செய்தாக வேண்டும்.காவல்துறை நேரடியாக புலன் விசாரணை செய்யக் கூடிய வழக்குகளில், புகார் வந்தால் உடனே வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என 2013-ஆம் ஆண்டு   Lalita Kumari vs Govt.Of U.P.& Ors  என்ற வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் P Sathasivam, B.S. Chauhan, Ranjana Prakash Desai, Ranjan Gogoi, S.A. Bobde ஆகியோர் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு  “Registration of FIR is mandatory under Section 154 of the Code, if the information discloses commission of a cognizable offence and no preliminary inquiry is permissible in such a situation” எனத் தீர்ப்பளித்துள்ளது.

 

sathankulam incident... madurai struggle


சாத்தான்குளம் சம்பவத்தில் உரிய புகார், நேரடி சாட்சிகள், அடித்ததற்கான மருத்துவ சிகிச்சை ஆதாரங்கள் மிக வலுவாகக் கிடைத்த பின்பும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி இரட்டைப் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யாமல் தடுப்பது யார்? கைது செய்யாமல் காப்பாற்றுவது  எந்த சக்தி? என்ற கேள்விக்கு விடை வேண்டும்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ நடந்தது “லாக்-அப் டெத் அல்ல” அன்று பேசுவதும், முதல்வர் பழனிசாமி “உயர்நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைப்போம்” என்பதும் பிரச்சனையை நீதிமன்றம் பக்கம் தள்ளி விடுவதாகும். கொலை வழக்கு பதிவு செய்வதை, சாத்தான்குளம் போலீசாரை கைது செய்வதை நீதிமன்றம் தடுத்ததா? மற்ற கொலை வழக்குகளில் உடனே வழக்கு, கைது,ஒப்புதல் வாக்குமூலம், அடிப்பதற்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் என்பதே வழக்கமான சட்ட நடைமுறை.கொலை வழக்கில் உடனடி விசாரணை மிக முக்கியமானது. காவல்துறைக்கு இது பொருந்தாதா? காவல்துறையினர் சட்டத்திற்கு மேலானவர்களா?   காவல்துறையினருக்கு சட்டத்தில் விதிவிலக்கு உள்ளதா?  

இடைக்கால பணிநீக்கம், பணிமாறுதல் என்பது தண்டனை அல்ல! வேலை செய்யாமலே சம்பளம் வாங்குவதற்கான ஏற்பாடு. காவல்துறையில் கீழிருந்து மேல்மட்டம்வரை லஞ்சம்-ஊழல் மலிந்துள்ளது, கீழ்நிலைப் போலீசார்தான் வசூல் செய்து கொடுப்பவர்கள் என்பதோடு, தாங்கள் கோடி,கோடியாய் கொள்ளையடிப்பதற்கு காவல்துறையின் உதவி தேவை என்பதே காவல் உயர் அதிகாரிகளும்-தமிழக அரசும் சாத்தான்குளம் போலீசாரைக் காப்பதற்கான அடிப்படை.

மேலும் இவ்வழக்கில் சாத்தான்குளம் நீதித்துறை நடுவர், மருத்துவர், கோவில்பட்டி துணை ஜெயிலர் உள்ளிட்டோர் மீதான நடவடிக்கை என்ன? என்பதற்கும் பதில் இல்லை.முன்னாl உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்துரு, அரி பரந்தாமன் ஆகியோர் நீதித்துறை நடுவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர். சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் உச்சநீதிமன்றத்தின் டி.கே.பாசு மற்றும் அர்னேஷ் குமார் வழக்கின் தீர்ப்பை மீறியுள்ளார். அர்னேஷ் குமார் வழக்கில் ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை கிடைக்கும் பிரிவுகளின் கீழான வழக்குகளில் தேவையின்றி ரிமாண்ட் கூடாது – அவ்வாறு செய்தால் சம்மந்தப்பட்ட நீதித்துறை நடுவர் மீது உயர்நீதிமன்றம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

sathankulam incident... madurai struggle

 

நக்கீரன் கோபால் மற்றும் ஜீவானந்தம் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் “தேவையற்ற கைது கூடாது – பிரிவு 188-ன் கீழ் காவல்துறை வழக்கே பதியக்கூடாது என உத்தரவிட்ட பின்பும் – சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் உச்ச, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை கடைபிடிக்கவில்லை. கரோனா பேரிடர் காலத்தில் தேவையற்ற கைது கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவையும் கடைபிடிக்கவில்லை. சாத்தான்குளம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள நீதித்துறை நடுவர்களில் 80% பேர் காவல்துறையின் எந்தக் கைதையும் கேள்விக்குட்படுத்துவதில்லை. சில நீதித்துறை நடுவர்கள் போலீசை கேள்வி கேட்டால் அவர்களை மிரட்டிப் பணிய வைக்கிறது காவல்துறை நீதித்துறை நடுவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சென்னை உயர்நீதிமன்றம் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.. “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே – வானம் வீழினும் நீதி நிலவுக” என்ற மரபு கொண்ட தமிழகத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதே சரி! எனவே சாத்தான்குளம் நீதித்துறை நடுவர்,மருத்துவர், கோவில்பட்டி துணை ஜெயிலர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை அவசியமானது.

கரோனா பேரிடர் சூழலைப் பயன்படுத்தி காவல்துறைக்கு எல்லை மீறிய அதிகாரங்கள் கொடுப்பது அரசியல் சட்டத்தின் ஆட்சியை மீறுவதாகும். அரசியல் சட்டத்தின் அனைத்து உறுப்புகளும் தங்களது வரையறுக்கப்பட்ட அதிகாரத்தில் நிற்பதே சரி. ஆனால் காவல்துறை மட்டும் தொடர்ந்து சட்டத்தின் ஆட்சியை மீறுகிறது. காரணம் தங்களை அரசு பாதுகாக்கும் என்று நம்பிக்கைதான். உலகமே கண்டித்த சாத்தான்குளம் சம்பவத்திற்கு காவல்துறை மீது உரிய நடவடிக்கை இல்லாவிட்டால் வேறு எந்த வழக்கிலும் நீதி கிட்டாது! நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவோம் என மதுரை வழக்கறிஞர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்