சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட போலீசாரிடம் 12 மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்ற நிலையில், விசாரணைக்காக பிடிக்க முயன்றபோது சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர், தலைமை காவலர் தப்பிச் செல்ல முயன்றனர். விசாரணையின்போது தப்ப முயன்ற தலைமை காவலர் முருகனை சிபிசிஐடி போலீசார் துரத்திச் சென்று பிடித்தனர். பாலகிருஷ்ணனும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தப்பி செய்ய முயன்றார் என சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. பாலகிருஷ்ணனும், முருகனும் தப்பிக்க முயற்சித்த தகவல் அனைத்தும் ஆவணங்களில் சேர்க்கப்படும் என சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், முருகன் ஆகிய 3 பேரும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்தநிலையில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஆகியோரை ஜூலை 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ரகுகணேஷ் கைது செய்யப்பட்டு இன்று அதிகாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.