மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் ஒன்றிய மாநாடு நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பாலகிருஷ்ணன் பேசும் போது, “சசிகலா வருகை என்பது அதிமுகவுக்குள் கோஷ்டி பூசல் அதிகரிக்கும், குழப்பங்கள் அதிகரிக்கும். அதிமுகவுக்குள் குழப்பத்தை உருவாக்கி கபளீகரம் செய்வதற்கு பாஜக முயற்சி செய்கிறது. எல்லா மாநிலத்தில் செய்வதைப் போல் இங்கேயும் செய்கிறார்கள்.
மத்திய அரசு மாநில அரசுக்கு நிலக்கரியை கொடுக்க மறுத்து வருகின்றனர். இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு பல மாநிலங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆவணங்கள் அளவில் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், ஆனால் நிலக்கரி இருப்பு என்பது இல்லை. இது குறித்து அதிமுக முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் இருப்பு இல்லை என்பதை கண்டுபிடித்து விட்டோம் ஏன் நடவடிக்கை இல்லை என்பதற்கு அவரிடம் பதில் இல்லை. இது தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரங்களையும் தர வேண்டும், அதேபோல் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த உள்ளாட்சித் தேர்தல் மூலமாக மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.
அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் நல்லது. கோவிலுக்கு சொந்தமான ஆவணங்கள், விலை மதிப்பற்ற நகைகள், பல்லாயிரம் கோடி ரூபாய்கள் பாதுகாக்க வேண்டும் என்றால் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். நீதிமன்றங்கள் கூட கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் நல்லது என்று கூறியுள்ளனர். இந்துக்களிடம் கோவில்களை ஒப்படைக்க வேண்டும் என்ற RSSயின் கருத்து ஆபத்தானவை. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கல்லூரிகள் துவக்குவது வரவேற்கத்தக்கது. அதேநேரம் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் பணியாளர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனக் கூறினார்.