புறம்போக்கு நிலத்தை போலியாக பட்டா பெற்றதோடு அதில் இருந்த மண்ணை ஆயிரக்கணக்கான லோடுகளில் வருடக்கணக்கில் அள்ளியுள்ளனர். ஆளுங்கட்சியான இருவரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பதோடு அமைச்சர் கருப்பண்ணனுக்கு நெருக்கமானவர்கள். இதைக் கண்டுபிடித்து மண் திருடியது உண்மை என்றும் இதற்காக குறைந்தபட்ச அபராதம் மட்டும் ரூபாய் எட்டுக் கோடி கட்ட வேண்டும் என ஈரோடு கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மாவட்ட எஸ்.பி.அலுவலகத்திற்கு வந்து மாவட்ட எஸ்.பி.யிடம் மனு கொடுத்தனர். பிறகு அவர்கள் கூறும்போது, "ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்காவிற்குட்பட்ட வடமுகம், வெள்ளோடு, கொம்மகோயில் பகுதியைச் சேர்ந்த சேனாபதி மற்றும் சுப்பிரமணியன் இருவரும் கூட்டாக சேர்ந்து கருமாண்டி, செல்லிபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடருக்கு அரசால் வழங்கிய நிபந்தனை பட்டா நிலத்தை அதற்கான அரசு ஆவணங்களை மறைத்தும், போலியாக ஏற்படுத்தியும் அரசிற்கு தெரியாமல் கிரயம் பெற்றுள்ளனர்.
மேலும் முறையற்ற வகையில் அரசிற்கு தெரியாமல் அதிக அளவில் நிலத்தில் உள்ள கிராவல் மண்ணை வெட்டி எடுத்து விற்பனை செய்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் மாசடைவதோடு பல அறிய வகை மரம், செடி, பறவை மற்றும் விலங்கினங்களும் அழிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பெருந்துறை தாலுக்கா சென்னிமலை, கொங்கம்பாளையம் கிராமத்திலும் முறையற்ற வகையில் அரசை ஏமாற்றி கிராவல் மண்ணை வெட்டி எடுத்து விற்பனை செய்துள்ளனர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்கனவே இருவர் மீது 7 கோடியே 99 லட்சத்து 73 ஆயிரத்து 100 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. நிபந்தனை பட்டா நிலத்தை அரசினை ஏமாற்றி போலியாக கிரயம் செய்தது தொடர்பாகவும், அரசின் அனுமதி பெறாமல் கிராவல் மண் வெட்டி எடுத்தது தொடர்பாகவும் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஒரு வருடமாகியும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் பின்னணியில் அமைச்சர் கருப்பண்ணன் இருக்கிறார்" என்றனர்.