சேலம் மரவனேரியைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். அக். 6ம் தேதி, அவர் சொந்த வேலையாக அணைமேடு சந்திப்பு அருகில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை கத்தி முனையில் மிரட்டி ஒரு பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்த புகாரின்பேரில் அஸ்தம்பட்டி காவல்துறையினர் விசாரித்தனர். நகை பறிப்பில் ஈடுபட்டது, அம்மாபேட்டை பெரியார் நகரைச் சேர்ந்த ரமேஷ் மகன் சந்தோஷ்குமார் (23) என்பது தெரிய வந்தது. சம்பவம் நடந்த அன்றே அவரை காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சந்தோஷ்குமார் மீது கடந்த ஆண்டு காபி பார் ஒன்றில் புகுந்து கல்லாவில் பணத்தைத் திருடியது, வீட்டின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் 26000 ஆயிரம் ரூபாய் திருட்டு, மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள் மற்றும் 6000 ரூபாய் திருட்டு, மற்றொரு இடத்தில் 7 பவுன் நகைகள் திருட்டு என பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதுடன், பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால், சந்தோஷ்குமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில் ஆகியோர் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து ஆணையர் செந்தில்குமார், கொள்ளையன் சந்தோஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி சந்தோஷ்குமாரை, அக். 24ம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொள்ளையனிடம் குண்டர் சட்ட கைது ஆணை சார்வு செய்யப்பட்டது.