சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பியூஷ் மானுஷ். சமூக ஆர்வலர். அவர், ஆஷா குமாரி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் குத்தகை ஒப்பந்த அடிப்படையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஒப்பந்தக்காலம் முடிந்த பிறகும் அவர் வீட்டைக் காலி செய்ய மறுப்பதாக ஆஷா குமாரி, சேலம் கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
வீட்டுக்குச் சென்று இது தொடர்பாக பேசியபோது, அவரை பியூஷ் மானுஷ் ஆபாச வார்த்தைளால் திட்டியதாகவும், தாக்கி காயப்படுத்தியதாகவும் புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில் பியூஷ் மீது பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், புதன்கிழமை (பிப். 26) மாலையில் அவரை கைது செய்தனர்.
நீதிமன்ற உத்தரவின்பேரில் 15 நாள்கள் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நிர்வாக காரணங்கள் என்ற பெயரில் திடீரென்று பியூஷ் மானுஷை சேலம் மத்திய சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அவரை பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர்.