சேலத்தில் தனியார் வங்கி லாக்கரில் வைத்திருந்த நகைகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மெய்யனூரில் தனியார் வங்கி ஒன்றின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுகுமார் என்பவர் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கியில் நகைக்கடன்கள் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 137 கிராம் நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து வங்கி மேலாளர் சுகுமார் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் வங்கியின் நகைக்கடன் பிரிவில் பணியாற்றி வரும் பிரகாஷ், நூர்தீன் ஆகியோரின் பொறுப்பில்தான் லாக்கர் பிரிவு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தெரியாமல் நகைகள் காணாமல் போக வாய்ப்பு இல்லை. எனவே அவர்களிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அதன்பேரில் தனியார் வங்கி ஊழியர்கள் இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.