Skip to main content

சிறுமியைத் தலை துண்டித்து கொலை; வாலிபருக்குத் தூக்குத் தண்டனை! போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

Salem Pocso court order sentence to child girl case

 

ஆத்தூர் அருகே, 13 வயது பள்ளிச் சிறுமி தலையைத் துண்டித்து, கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், வாலிபருக்குத் தூக்குத் தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (ஏப். 26) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. 


சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் சாமிவேல். இவருடைய மனைவி சின்னப்பொண்ணு. இவர்களுடைய இரண்டாவது மகள் ராஜலட்சுமி (13). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமி, உள்ளூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். இவர்களுடைய வீட்டில் இருந்து சுமார் 150 அடி தூரத்தில் கார்த்தி என்கிற தினேஷ்குமார் (25) என்பவரின் வீடு உள்ளது. இவருடைய மனைவி சாரதா. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 


தினேஷ்குமார், கதிர் அறுக்கும் வண்டியில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு அக். 22ம் தேதி இரவு, 7.30 மணியளவில், தன் வீட்டில் இருந்து கொடுவாளுடன் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆவேசமாக சென்றார். அங்கு சிறுமியும், அவளுடைய தாயாரும் பூக்கட்டிக் கொண்டிருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியை கழுத்தில் வெட்டினார். தடுக்கப் பாய்ந்த தாயாரையும், சுவரில் மோதி கீழே சாய்த்தார். இதில் அவர் நிலைகுலைந்தார். சிறுமியை அவளுடைய வீட்டு வாசல் வரைக்கும் தரதரவென இழுத்து வந்த வாலிபர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். 


தலையை தனியாக துண்டித்து கையில் எடுத்துச்சென்ற தினேஷ்குமார், நிகழ்விடத்தில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் தளவாய்ப்பட்டி & ஈச்சம்பட்டி மண் சாலையில் வீசிவிட்டு, தன் வீட்டுக்குள் சென்று பதுங்கிக் கொண்டார். செல்லும் வழியில் வீடு அருகே இருந்த ஒரு சிறு நுணா மரத்தையும் அடியோடு வெட்டி வீழ்த்தி இருக்கிறார். பின்னர், அருகில் இருந்த முள்புதருக்குள் கொலைக்குப் பயன்படுத்திய கொடுவாளை வீசியெறிந்துள்ளார். 


உடலெங்கும் ரத்தம் தெறித்து இருந்ததையும், சிறுமியின் தாயாரின் அலறல் சத்தத்தையும் கேட்டு பதறிய சாரதாவும், தினேஷ்குமாரின் தம்பி சசிகுமாரும் நிகழ்விடத்திற்கு ஓடிச்சென்று பார்த்தனர். அங்கு சிறுமியின் தலையின்றி உடல்  மட்டும்  ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதேநேரம் வீட்டுக்குள் பித்துப் பிடித்தவர் போல தினேஷ்குமார் அமர்ந்து கொண்டு, வீட்டின் விட்டத்தையே பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். மனைவியும் தம்பியும் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. இதையடுத்து சாராதாவும், சசிகுமாரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தினேஷ்குமாரை உட்கார வைத்து நிகழ்வு நாளன்று இரவு 8.30 மணியளவில் ஆத்தூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 


இரண்டு நாள்கள் காவல்நிலையத்தில் வைத்து, எல்லா வகையிலும் விசாரித்துப் பார்த்தும், கொலைக்கான காரணம் தெரியவரவில்லை. விசாரணையின்போது தினேஷ்குமார், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல தனக்குத்தானே ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தார் என்றது காவல்துறை தரப்பு. இதற்கிடையே, கொலைக்குப் பயன்படுத்திய கொடுவாளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
 

கொலையை நேரில் பார்த்ததற்கான சாட்சிகள் இருந்ததாலும், முதல் தகவலின் பேரிலும், கொலையுண்ட சிறுமி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதாலும், காவல்துறையினர் கொலை, ஆபாசமாக பேசுதல், சாதி வன்கொடுமை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 25.10.2018ம் தேதி, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்தியச் சிறையில் தினேஷ்குமாரை அடைத்தனர்.


தொடர் விசாரணையில், வேறு பல பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. சம்பவம் நடப்பதற்கு மறுநாள் சிறுமியின் பள்ளியில் ஆண்டு விழா நடக்க இருந்தது. அதில், மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் கொடுத்திருந்த ராஜலட்சுமி, மாரியம்மன் சாமி வேடம் போட இருப்பதாக கூறி வந்திருக்கிறாள். இதற்காக, சம்பவத்தன்று மாலை தினேஷ்குமாரின் தோட்டத்தில் இருந்து மல்லிகைப் பூக்களை பறித்து வந்திருக்கிறாள். தனது தாயாருடன் சேர்ந்து பூக்கட்டுவதற்கான வேலையில் ஈடுபட்டு இருந்திருக்கிறாள். அப்போது பூக்கட்டுவதற்கான நூல் கண்டு இல்லாததால், அதை வாங்கி வருவதற்காக தினேஷ்குமாரின் மனைவி சாரதாவிடம் கேட்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றிருக்கிறாள். அப்போது தினேஷ்குமார், சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும், இதுகுறித்து தன் தந்தையிடம் சொல்லி விடுவேன் என்று சிறுமி சொன்னதாகவும் தெரிகிறது. 


இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் மானம் போய் விடும் என்பதால், ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், சிறுமியை வீடு புகுந்து கொடூரமாக கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளி மீதான எப்.ஐ.ஆர். திருத்தம் செய்யப்பட்டு, அவன் மீது போக்சோ வழக்கும் பாய்ந்தது. கொடூரமான கொலை குற்றத்தில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. 


இந்த வழக்கின் விசாரணை, சேலம் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தினேஷ்குமார் குற்றவாளி என்று திங்கள்கிழமை (ஏப். 25) நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார். அவருக்கு செவ்வாய்க்கிழமை (ஏப். 26) தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது. 


அதன்படி, தினேஷ்குமாருக்கு கொலை குற்றத்திற்கு தூக்குத் தண்டனையும், சாதி வன்கொடுமை குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும் 26 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு அளித்தார். அபராத தொகையை, கொலையுண்ட சிறுமியின் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. சிறுமி தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ஆசைத்தம்பி கூறுகையில், ''இந்த தீர்ப்பை முழுமனதாக ஏற்கிறோம். பட்டியலினத்தவர்கள் மீது நடக்கும் வன்கொடுமை சம்பவங்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது'' என்றார். 


இந்த தீர்ப்பைக் கேட்டு தினேஷ்குமாரும், அவருடைய குடும்பத்தினரும் நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்நிலையில் சிறுமி ராஜலட்சுமியை பறிகொடுத்த அவளுடைய பெற்றோர், ''இனிமேலும் எங்களுக்கு எங்கள் மகள் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கின்றோம். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது'' என்றனர். 

 

Salem Pocso court order sentence to child girl case


ராஜலட்சுமி கொலையுண்ட சில நாள்கள் கழித்து, சிறுமியின் பெற்றோரை அவர்களுடைய வீட்டில் சந்தித்துப் பேசினோம். சிறுமியின் முண்டம் கிடந்த வீட்டு வாசல் பகுதியில், செங்கற்களை வரிசையாக அடுக்கி வைத்து, மலர்களை தூவி தெய்வமாக வழிபட்டனர். 


அப்போது அவர்கள் கூறுகையில், ''பொட்ட புள்ளைங்க நடு தடத்துல சுதந்திரமாக நடக்கணும். அதுக்கு தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டன கிடைக்கணும்,'' என்றனர். தற்போது அவர்கள் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்