Skip to main content

சேலம் மேயரின் மருமகள் திடீர் மரணம்; சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் புகார் 

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
 Salem Mayor's Daughter-in-law passes away

சேலம் மாநகராட்சி மேயரின் மருமகள் திடீரென்று மர்மமான முறையில் இறந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன். இவருடைய மகன் சுதர்சன்பாபு (40). இவருடைய மனைவி சுதா (38). இவர்கள், சின்ன கொல்லப்பட்டியில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. சவுமித்தா என்ற ஒரு  மகள் இருக்கிறார். இவர், தற்போது ஏற்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர்கள் வீட்டின் மேல் தளத்தில் மேயரின் மனைவி வசிக்கிறார். மேயர் ராமச்சந்திரன், செட்டிச்சாவடியில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கிறார். 

 Salem Mayor's Daughter-in-law passes away

சுதாவுக்கு, நீரிழிவு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், ஜன. 31ம் தேதி அவர், வீட்டில் திடீரென்று மயங்கி விழுந்து விட்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். 

உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவப் பரிசோதனையில், வரும் வழியிலேயே சுதா இறந்து விட்டது தெரிய வந்தது. இதையறிந்த சுதாவின் உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்த சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். 

இது ஒருபுறம் இருக்க சுதாவின் உறவினர்கள் ஊடகங்களிடம் கூறுகையில், ''சுதாவுக்கு உடல்நலம் பிரச்னை இருந்தது. ஆனாலும் அவருக்கு கணவரும், மேயரின் வீட்டாரும் சரியாக சாப்பாடு போடாமல் பட்டினி போட்டு கொடுமைப் படுத்தியதால்தான் அவர் இறந்துவிட்டார். அவருடைய கணவருக்குக் குடிப்பழக்கம் இருக்கிறது. அவர் சுதாவை எல்லா வகையிலும் கொடுமைப்படுத்தி வந்தார். சுதாவின் சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும்'' என்றனர். 

இதையடுத்து சுதாவின் சடலம் கூராய்வு செய்யப்பட்டது. அவருடைய சாவுக்குக் காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றுகூறி திடீரென்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

 Salem Mayor's Daughter-in-law passes away

காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதுகுறித்து சுதாவின் தம்பி பரமசிவம் கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், மேயர், அவருடைய மகன் சுதர்சன்பாபு, மாமியார் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து மேயர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, ''என் மகன் சுதர்சன்பாபு, சிவில் சப்ளைஸ் துறையில் தணிக்கைப் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவம் நடந்த நாளன்று அவர் வெளியூரில் இருந்தார். சுதா இறந்துவிட்டதாக செல்போன் மூலம் கிடைத்த தகவலின் பேரில்தான் அவர் சேலம் வந்தார்.

என் மருமகளுக்கும், மகனுக்கும் சின்னச்சின்ன பிரச்னைகள் இருந்தன. என் மனைவி அவர்கள் விவகாரத்தில் ஒருபோதும் தலையிடுவதே கிடையாது. நானும் தனியாக வசிக்கிறேன். இந்த நிலையில் நாங்கள் எப்படி எங்கள் மருமகளை கொடுமைப்படுத்த முடியும்? 

மருமகளுக்கு வெற்றிலை, புகையிலை அதிகமாக போடும் பழக்கம் இருக்கிறது. இதனால் அவர் சரியாக சாப்பிடுவதில்லை. ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் குளூகோஸை பாக்கெட் பாக்கெட்டாக அப்படியே சாப்பிட்டு விடுவார். ஏதோ உள்நோக்கத்துடன் உறவினர்கள் எங்கள் மீது புகார் அளித்துள்ளனர். உடற்கூராய்வு அறிக்கையில் சாவுக்கான காரணம் தெரியவரும். எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார். 

சேலம் மாநகராட்சி மேயரின் மருமகள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்