சேலம் அருகே, தனியார் சொகுசு பேருந்து 30 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 16 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஒருவர் பலியானார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து 28 பயணிகளுடன் எஸ்ஆர்எஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான குளிர்சாதனம் மற்றும் படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசு பேருந்து, செவ்வாய்க்கிழமை இரவு (பிப்ரவரி 12) 10.30 மணியளவில் பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டது. பேருந்தின் மேற்கூரையில் 3 டன் அளவுக்கு பயணிகளின் சரக்குகள் ஏற்றப்பட்டு இருந்தன. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த சரவணன் (35) என்பவர் ஓட்டினார்.
இந்நிலையில், புதன்கிழமை (பிப்ரவரி 13) அதிகாலை 4.30 மணியளவில், அந்த பேருந்து சேலத்தைக் கடந்தது. கொண்டலாம்பட்டி பட்டாம்பூச்சி மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென்று 30 அடி உயரத்தில் இருந்து பேருந்து கீழே பாய்ந்தது. தூக்கக் கலக்கத்தில் இருந்த பயணிகள் அலறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்து அவர்களையும் நிகழ்விடத்திற்கு வரவழைத்தனர். அதிகாலை நேரம் என்றும் பாராமல் சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர், துணை ஆணையர்கள் தள்கதுரை, ஷியாமளாதேவி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் நிகழ்விடத்திற்கு நேரில் வந்தனர். பேருந்து விழுந்த பகுதியில் முள்புதர்கள் நிறைந்து காணப்பட்டதால், புதருக்குள் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பேருந்தின் இடிபாடு மற்றும் முள்புதர்களுக்குள் சிக்கிக்கொண்டவர்களை பத்திரமாக மீட்டனர். இவர்களில் திருப்பூரைச் சேர்ந்த தனசேகரன் (47) மட்டும் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
பைசல்கான், சிவசங்கர், சாந்தி, ரவி, ஜெயலட்சுமி, பிரபாகர், அஷ்வின், துரைசாமி, அவினாஷ், தில்முகமது, வாசுதேவன், பிரபாகரன் உள்பட 16 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 4 பேருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்தது.
அதிவேகம், அதிக பாரம் ஏற்றியது ஆகிய காரணங்களால்தான் இந்த விபத்து நடந்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, நிகழ்விடத்திற்கு நேரில் வந்து விபத்து நடந்த பகுதிகளை ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், ''பயணிகள் பேருந்துகளில் கண்டிப்பாக பயணிகளை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும். சரக்குகளை ஏற்றிச்செல்லக் கூடாது,'' என்றார்.
இந்த பேருந்தில் வந்த உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கணேசன், மனைவி ஈஸ்வரி, குழந்தைகள் அவந்திகா (9), பாலரூபன் (3) ஆகிய நால்வரும் நல்வாய்ப்பாக சிறு காயம்கூட இல்லாமல் தப்பித்தனர்.
விபத்து குறித்து ஈஸ்வரி கூறுகையில், ''உடுமலையில் கோயில் திருவிழாவுக்காக செல்கிறோம். அதிகாலை நேரத்தில் எல்லோரும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று பேருந்து பறந்து செல்வதுபோல இருந்தது. என்னவென்று யோசிப்பதற்குள் பேருந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது. பேருந்து விழுந்த பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது,'' என்றார்.
இந்த சம்பவத்தால் பட்டாம்பூச்சி மேம்பாலத்தில் சில மணி நேரத்திற்கு வாகனப்போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.