சேலத்தில், 3.50 லட்சம் ரூபாய் லஞ்சப்பணத்துடன் பேரூராட்சிகள் உதவி இயக்குநரை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (57). இவர், சேலம், நாமக்கல் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 53 பேரூராட்சிகளின் செலவினங்கள், நிர்வாகப்பணிகளை இவர் மேற்கொண்டு வருகிறார்.
பணி நிமித்தமாக, சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாலை சொந்த ஊருக்கு காரில் செல்லும் அவர், திங்கள்கிழமை காலையில் மீண்டும் பணிக்கு திரும்பி விடுவது வழக்கம்.
பேரூராட்சிகளில் துப்புரவு, குடிநீர் குழாய் பராமரிப்பு, தெருவிளக்கு பராமரிப்பு ஆகிய பணிகள் அதிகளவில் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளுக்கான செலவுத்தொகைக்கு உண்டான கோப்புகளில் இவர்தான் கையெழுத்திட வேண்டும். ஒவ்வொரு பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களும் கொண்டு வரும் 'பில்' தொகையை அனுமதிக்க, அவர்களிடம் இருந்து தலா 5 சதவீத தொகையை லஞ்சமாக பெற்று வந்தார். இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறைக்கு அடிக்கடி புகார்கள் சென்றவண்ணம் இருந்தன. அவரை பொறி வைத்துப் பிடிப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்நிலையில்தான், வெள்ளிக்கிழமை (டிச.11) மாலை அவர் சொந்த ஊருக்குச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. சந்திரமவுலிக்கு தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர், கனகராஜை பின்தொடர்ந்து சென்றனர். சேலத்தை அடுத்த அரியானூர் அருகே காரில் சென்று கொண்டிருந்த கனகராஜை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
அந்த காரில் சோதனையிட்டபோது, இரண்டு பைகளில் இருந்து கணக்கில் வராத 3.50 லட்சம் ரூபாய் இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்ததோடு, கனகராஜையும் உடனடியாக கைது செய்தனர். இதையடுத்து, சொந்த ஊரில் உள்ள அவருடைய வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப்பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது சில முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தெரிகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிச. 10- ஆம் தேதியன்று, சேலத்தில் முத்திரைத்தாள் பிரிவு துணை வட்டாட்சியர் ஜீவானந்தம் லஞ்சம் வாங்கியதாக பிடிபட்ட நிலையில், மறுநாளே இன்னொரு அரசு அதிகாரியும் லஞ்சப்பணத்துடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.