சேலத்தில் மொழிப்போர் தியாகிகள் நினைவு பொதுக்கூட்டம் சனிக்கிழமை (ஜன. 25) நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சேலம் வந்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அள்ளித்தெளித்த கோலம் போல, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது மட்டுமின்றி, நாடு முழுவதும் பல பிரச்னைகள் வெடித்து உள்ளன.
ஹிந்தி மொழி திணிக்கப்படுவதை எதிர்த்து, தமிழகம் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியது. ஆனால் இப்போது, வேறு பல வடிவங்களில் ஹிந்தி மொழியை திணித்து வருகிறது பாஜக. அமைச்சரவை பெயரைக்கூட ஜல் சக்தி என்றும், ஆயுஷ் என்றும் வைத்துள்ளனர். மத்திய அரசு, மும்மொழிக் கொள்கையை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் பாதிக்கும். தமிழகம் பாலைவனமாக மாறி, பட்டினி பிரதேசமாக மாறி விடும். இன்னொரு புறம், கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு பச்சைக்கொடி காட்டிவிட்டது. இதன்மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் வராமல் தடுத்துவிட்டு, ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலமாக தமிழகத்தை பாலைவனமாக்க பாஜக அரசு துடிக்கிறது.
எட்டுவழிச்சாலைத் திட்டத்தை மக்கள் நலனுக்கானது என்கிறார்கள். ஆனால், இத்திட்டத்தின் மூலம் கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, வேடியப்பன் மலை, கஞ்சமலை ஆகிய மலைகளில் பொதிந்துள்ள கனிம வளங்களை சுரண்டி, தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்தில்தான் இத்திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதுபோன்ற பல வஞ்சகமான திட்டங்களுக்கெல்லாம் தமிழக அரசு கைக்கட்டி, வாய் பொத்தி சேவை செய்யும் அரசாக கொத்தடிமை போல் செயல்படுகிறது.
மக்கள் எதிர்த்தாலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ள மத்திய அரசு, மக்கள் கருத்துகளைக் கேட்க வேண்டியதில்லை என சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்கள் குறித்து தமிழக அரசு கடிதம் எழுதுவதைத் தவிர, வேறு ஒன்றும் செய்யவில்லை. இந்த அரசு விரைவில் முடிவடையும். சில மாதங்களில் திமுக ஆட்சி மலரும்.