சேலம் அருகே, குடிபோதையில் ஏற்பட்ட தகராறின்போது தந்தையையே மகன் கடப்பாரையால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பெத்தாம்பட்டி பெருமாள் கோயில் காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (55). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் ராஜ்குமார் (35). இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.
ராஜ்குமார் தினமும் மது குடித்துவிட்டு போதையில் தன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவருடைய மனைவி கோபித்துக் கொண்டு அவருடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இதையடுத்து தந்தை, மகன் ஆகிய இருவர் மட்டும் வீட்டில் இருந்தனர். நவ. 23-ஆம் தேதி இரவு, அப்பா, மகன் இருவருமே மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். இரவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், திடீரென்று வீட்டில் இருந்த கடப்பாரையால் தன் தந்தையை தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த முருகன் அங்கேயே உயிரிழந்தார். போதையில் இருந்த ராஜ்குமார், தந்தையை கொன்றுவிட்டோம் என்ற பதற்றமே இல்லாமல் அவரும் சம்பவ இடத்திலேயே தூங்கியுள்ளார்.
நவ. 24- ஆம் தேதி காலை போதை தெளிந்து, தூக்கத்தில் இருந்து எழுந்த ராஜ்குமார், தந்தை இறந்து கிடந்ததைப் பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
சேலம் ஊரக காவல்துறை டி.எஸ்.பி. உமாசங்கர், ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளர் குலசேகரன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் ராஜ்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரும் தான்தான் குடிபோதையில் தந்தை என்றும் பாராமல் கடப்பாரையால் அடித்துக் கொன்றேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்திய கடப்பாரையையும் காவல்துறையினர் கைப்பற்றினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.