Skip to main content

முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்! சேலத்தில் இன்று முதல் அமல்!!

Published on 16/04/2020 | Edited on 16/04/2020


பொதுவெளியில் முகக்கவசம் அணியாமல் நடமாடுவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் திடீரென்று அறிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று நோய்த்தடுப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான உழவர் சந்தைகள், தினசரி சந்தைகள் பரந்த இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. 
 

ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் 1 மீட்டர் தொலைவு சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு சந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. 
 

 

salem corporation commissioner satheesh announced masks wear


சேலம் மாநகர பகுதிகளில் இதுவரை நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகள், தடை செய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. சேலத்தில் மட்டும் 70 இடங்கள் 'ஹாட் ஸ்பாட்' ஆக அறிவித்து, தெருக்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன.

தனித்திருத்தல், சமூக இடைவெளி விதிகளைப் பின்பற்றுவது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு பொது வெளியில் நடமாடும்போது முகக்கவசம் அணிவதும் இன்றியமையாதது ஆகிறது. ஆனாலும், பலர் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாகப் பொதுவெளியில் உலா வருகின்றனர்.

இருமல், தும்மலின்போது வெளியேறும் எச்சில், நீர்த்துளிகள் மூலம் அருகில் இருப்பவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் மாஸ்க் அணிவது கட்டாயம் என்கிறார்கள் சுகாதாரத்துறையினர்.
 

http://onelink.to/nknapp


இந்நிலையில், முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் நடமாடினால் அவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய உத்தரவு ஏப்ரல் 16- ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. 

இதேபோன்ற உத்தரவை, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று பிறப்பித்து இருந்த நிலையில், தற்போது சேலம் மாநகராட்சி ஆணையரும் 500 ரூபாய் அபராதம் விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சேவைகள், உணவுப்பொருள்களை வழங்க வேண்டும் என்று காய்கறி சந்தைகள், மளிகை கடைகள், உணவகங்கள், பெட்ரோல் பங்க்குகள், பேக்கரிகள், இறைச்சிக்கடைகளின் உரிமையாளர்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்