தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கரோனா இரண்டாம் அலையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கையும் கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசியையும் தமிழக அரசு பெரும் துணையாக கொண்டு செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில், கரோனா ஊரடங்கால், சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை வரும் 31ஆம் தேதிவரை நிறுத்தப்பட்டுள்ளது.
சேலத்தை அடுத்த காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ட்ரூஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் சேலம் - சென்னை, சென்னை - சேலம் இடையே இயக்கப்பட்டுவருகிறது.
கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாலும் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. இதனால், மே 13ஆம் தேதிமுதல் 22ஆம் தேதிவரை விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர், மே 23ஆம் தேதிமுதல் சேலம் - சென்னை வழித்தடத்தில் பயணிகள் விமானம் சேவை தொடங்கப்பட்டது. அன்று ஒருநாள் மட்டும் சொற்ப எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்தனர். அதற்கு அடுத்த நாள் ஒருவர் கூட விமான சேவைக்கு டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. மே 25ஆம் தேதியன்று வெறும் 9 பேர் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். அவர்களும் கடைசி நேரத்தில் பயணத் திட்டத்தை ரத்து செய்திருந்தனர்.
நோய்த்தொற்று அபாயம் காரணமாக பயணிகளிடையே விமானத்தில் பறக்கவும் ஆர்வம் குறைந்துள்ளது. இதையடுத்து மே 26ஆம் தேதி முதல் வரும் 31ஆம் தேதிவரை சேலம் - சென்னை பயணிகள் விமான சேவையை முற்றிலும் நிறுத்தி வைப்பதாக விமான நிலைய இயக்குநர் ரவீந்திர ஷர்மா தெரிவித்துள்ளார்.