சேலம் - சென்னை விமான சேவை இனி வாரத்தில் இரண்டு முறை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனினும், இது தற்காலிகமான முடிவுதான் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் பகல் நேரத்தில் மட்டும் ட்ரூ ஜெட் நிறுவனம் சார்பில் விமானம் இயக்கப்பட்டு வந்தது. கரோனா ஊரடங்கின்போது விமான சேவையும் ரத்து செய்யப்பட்டிருந்தது. பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, மே 27ம் தேதி பயணிகள் விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. என்றாலும், பயணிகள் கூட்டம் இல்லாததால் விமானத்தை இயக்குவது பெரும் இழப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சேலம் - சென்னை விமான சேவை வாரம் இருமுறை மட்டுமே இயக்கப்படும் என ஜூலை 27ம் தேதி அன்று ட்ரூஜெட் நிறுவனம் திடீரென்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன மேலாளர் கூறியது: “சேலம் - சென்னை பயணிகள் விமானம், வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வரை வாரத்தில் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும்.
சில நிர்வாக காரணங்களுக்காக இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு முழுமையாக விலக்கி கொள்ளப்பட்ட பிறகு, மீண்டும் விமான சேவை முழுமையாக வழங்கப்படும். கூடுதல் விமானங்களும் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளன,'' என்றார்.