சேலத்தில் கல்லால் தாக்கி ஆட்டோ ஓட்டுநர் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை காவல்துறையினர் புதன்கிழமை (நவ. 6) கைது செய்துள்ளனர்.
சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி சாலையைச் சேர்ந்த முருகன் மகன் ரமேஷ் (26). ஆட்டோ ஓட்டுநர். கடந்த 3ம் தேதி இரவு, சேலம் பள்ளப்பட்டி உடையார் காடு என்ற பகுதியில் முள்புதர் அருகே அவரை ஒரு கும்பல் கல்லால் தாக்கியும், மதுபான பாட்டிலால் குத்தியும் படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.
விசாரணையில், ரமேஷின் நண்பரே ஆள்களை வைத்து அவரை தீர்த்துக்கட்டி இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கு தொடர்பாக அவருடைய நண்பரும் ஆட்டோ ஓட்டுநருமான வெங்கடேசன் (31), அவருடைய அண்ணன் மணிவண்ணன் (36), தம்பி முருகேசன் (25), சித்தி மகன் கார்த்திக் (30) ஆகியோரை காவல்துறையினர் நவ. 5ம் தேதி கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியான வெங்கடேசனுக்கும், அவருடைய மனைவியின் அக்காள் மகளுக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. அதே பெண்ணுடன் கொல்லப்பட்ட ரமேஷூம் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வெங்கடேசனும், அவருடைய நண்பர்களும் சேர்ந்து ரமேஷை போட்டுத்தள்ளி இருப்பது தெரிய வந்தது.
இந்த வழக்கில் வெங்கடேசனின் மற்றொரு அண்ணன் குணா என்கிற குணசேகரன், தாதகாப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தி ஆகியோருக்கும் தொடர்பு இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் நவ. 5ம் தேதி இரவு குணாவையும் காவல்துறையினர் பிடித்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மூர்த்தியை தேடி வருகின்றனர்.