சேலத்தை அடுத்த வீராணம் மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவருடைய மகன் தினேஷ் என்கிற தினேஷ்குமார் (27).
கடந்த ஜனவரி 31ம் தேதி, அம்மாபேட்டையைச் சேர்ந்த சித்தேஸ்வரன் என்பவர் சொந்த வேலையாக வலசையூர் பேருந்து நிறுத்தம் அருகே நின்று இருந்தார். அப்போது அங்கு வந்த தினேஷ்குமார், கத்தி முனையில் சித்தேஸ்வரனிடம் 1500 ரூபாய் பறித்தார். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போடவே, அந்தப் பகுதியில் இருந்த சிலர் தினேஷை பிடிக்க முற்பட்டனர். அவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை காவல்துறையினர் தினேஷ்குமாரை கைது செய்தனர். விசாரணையில், கடந்த 2017 நவம்பர் மாதம் காரிப்பட்டி காவல் சரகத்தில் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த குட்டிகண்ணன் என்கிற குமாரையும், அவருடைய சகோதரியையும் இரும்பு குழாயால் கடுமையாக தாக்கிய வழக்கிலும், கடந்த ஆண்டு காரிப்பட்டி அருகே புதூரான் காட்டைச் சேர்ந்த கிருபாகரன் என்பவரை முன்விரோதம் காரணமாக தடியால் தாக்கிய வழக்கிலும் கைது செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இந்த வழக்குகளில் இருந்து பிணையில் வெளியே வந்த அவர், மீண்டும் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, அம்மாபேட்டை காவல் ஆய்வாளர், மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை ஆகியோர் மாநகர காவல்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்தனர். ஆணையர் சங்கர் உத்தரவின்பேரில், தினேஷ்குமாரை திங்கள்கிழமை (மார்ச் 4, 2019) குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். தடுப்புக்காவல் ஆணையை, ஏற்கனவே சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினேஷிடம் சார்வு செய்யப்பட்டது.