
சேலம் அல்லிக்குட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சரவணன் என்கிற ராஜா (வயது 45). இவர் காதலர்களுடன் இருக்கும் இளம்பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுத்து அவர்களை மிரட்டி நகை, பணம் பறித்து வந்துள்ளார். சில பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் அவரை சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இவர் கைதான பிறகு மேலும் சில பெண்கள் இவர் மீது புகார் கொடுத்துள்ளனர். அன்னதானப்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பல ஆண்டுகளாக இளம்பெண்களை குறி வைத்து மிரட்டி, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், காவல் துறையினர் இவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்தனர். அன்னதானப்பட்டி சரக உதவி ஆணையர் அசோகன், ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சேலம் ஜே.எம்.4 நீதிமன்றத்தில் சரவணனை காவலில் எடுக்க மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட நீதித்துறை நடுவர் யுவராஜ், ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இதையடுத்து மத்திய சிறையில் இருந்து சரவணனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதுவரை எத்தனை பெண்களிடம் பணம், நகை பறிப்பில் ஈடுபட்டு உள்ளார்? ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா? மிரட்டி பறித்த பணம், நகைகளை எங்கு வைத்துள்ளார்? அவருடைய கூட்டாளிகள் யார் யார்? எனக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.