
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சபீர். இவர் தனது நண்பர்களான பாலாஜி மற்றும் கோகுலநாதன் உள்ளிட்டோர் உடன் சேர்ந்து கூட்டாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பின்போது இவர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆயிரம் ரூபாய் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. இதனைத் தான் மாற்றிக் கொடுப்பதாகக் கூறி சபீர் தனது பங்குதாரர்களிடம் செல்லாத ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் பல ஆண்டுகள் கடந்தும் செல்லாத இந்த ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை தற்போது வரை சபீர் மாற்றிக் கொடுக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இதனிடையே சபீரிடம் பணத்தைக் கொடுத்தவர்களில் ஒருவரான பாலாஜி என்பவர் உயிரிழந்து விட்டார். அதே சமயம் பணம் கொடுத்துப் பல ஆண்டுகளாகியும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காதது குறித்து சபீரிடம் கோகுலநாதன் கேட்டுள்ளார். அப்போது, “அந்தப் பணம் தன்னிடம் அப்படியே இருக்கிறது. இதனை மாற்றுவதற்காக முயற்சி செய்த வகையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளேன். அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் செல்” எனக் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து கோகுலநாதன் இது குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “சபீர் எனபவர் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்தப் புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் சபீரின் வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் செல்லாத ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களைப் பதுக்கி வைத்திருந்த சபீரை கைது செய்தனர். இதனையடுத்து சபீரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். அதே சமயம் பறிமுதல் செய்யப்பட்ட செல்லாத ஆயிரம் மற்றும் ஐந்நூறு நோட்டுகளையும் போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.