மும்பை காவல்துறையினரிடம் சில ஆண்டுகளாக பிடிபடாமல் தண்ணீ காட்டி வந்த ரவுடி, தமிழ்நாடு & கர்நாடகா எல்லைக்கு உட்பட்ட தனியார் விடுதியில் பதுங்கியிருந்தபோது துப்பாக்கி முனையில் காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஆசிப் என்கிற இலியாஸ். இவர் மீது அந்த மாநிலத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் கொள்ளை, கொலை, ஆள்கடத்தல், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட 45- க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் காவல்துறையினரிடம் பிடிபடாமல் ஆசிப் என்கிற இலியாஸ் தொடர்ந்து போக்குக் காட்டி வந்துள்ளான்.
இந்த நிலையில், கர்நாடகா - தமிழ்நாடு எல்லைப் பகுதிக்கு உட்பட்ட அத்திப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தலைமறைவாக இருப்பது குறித்து மும்பை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மும்பை காவல்துறை, அவன் பதுங்கியிருக்கும் இடம் குறித்து கர்நாடகா மாநில காவல்துறைக்கு தகவல் அளித்தது. அதன்பேரில் கர்நாடகா மாநில காவல்துறை தனிப்படையினர், ஆசிப் பதுங்கி இருந்த தனியார் விடுதியை சுற்றி வளைத்தனர்.
அவன் அறைக்குள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். ஆனால் அந்த அறையின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்ததால், விடுதி நிர்வாகத்திடம் இருந்து மாற்று சாவியைப் பெற்ற காவல்துறையினர், அதன்மூலம் அறையைத் திறந்து உள்ளே சென்றனர். அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஆசிபை துப்பாக்கி முனையில் பிடித்து கைது செய்தனர்.
அவனிடம் இருந்து கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், பத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள், 20- க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். முகம் தெரியாத பல நபர்களின் ஆதார் நகல்களைக் கொடுத்து சிம் கார்டுகளைப் பெற்றிருப்பது தெரிய வந்தது.
அவனை அத்திப்பள்ளி காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அவன் பிடிபட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த மும்பை காவ்துறையினர் அத்திப்பள்ளி விரைந்தனர். அவர்களிடம் ஆசிபை, கர்நாடகா காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
மும்பை காவல்துறைக்கு சவாலாக விளங்கிய ரவுடி, தமிழக மற்றும் கர்நாடகா எல்லைப்பகுதியில் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.