நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் கடைகள் திறந்திருக்கும் என அரசாங்கம் அறிவித்தாலும் அந்த கடைகளில் கூட்டம் கூடுகிறது என காவல்துறை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் எதையும் திறக்க அனுமதிப்பதில்லை. இதனால் பொதுமக்களை விட வியாபாரிகள் தான் பெரிதும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.
காய்கறிகளில் தக்காளி, கத்தரிக்காய் போன்ற சில காய்கறிகள் தோட்டத்தில் இருந்து பறித்து நான்கு அல்லது ஐந்து நாட்களில் விற்பனை செய்துவிட வேண்டும். இல்லையேல் அவை அழுகிவிடும். அதுமட்டும்மல்ல வாழைப்பழம், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை போன்றவையும் சில நாட்களில் விற்பனை செய்துவிட வேண்டும் இல்லையேல் அழுகிவிடும்.
தடை போடப்போகிறார்கள், போக்குவரத்து நிறுத்தப்பட போகிறது என்பதால் தட்டுப்பாடு வரும் என்பதால் முன்கூட்டியே இறக்குமதி செய்யப்பட்டது. அத்தியாவசிய கடைகள் தினமும் திறந்திருக்கும் எனச் சொன்னதால் பொதுமக்கள் அதிகபட்சம் ஒரு வாரத்துக்குத் தேவையானதை வாங்கிச் சென்றார்கள். இப்போது பொருட்கள் காலியாகத் தொடங்க காய்கறி வாங்க மார்க்கெட் வாங்க வருகிறார்கள். கூட்டம் அதிகமாக வருகிறது எனச்சொல்லி எங்களை திறக்க வேண்டாம் எனத் தடைப்போடுகிறார்கள். இதனால் எங்களிடம் உள்ள பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை. அவைகள் அழுகத் தொடங்கியுள்ளன.
தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் திறக்க அனுமதி தாருங்கள் எனக்கேட்டாலும் தரமறுக்கிறார்கள் அதிகாரிகள். இதனால் 30 ஆயிரம், 40 ஆயிரம் முதலீடு போட்டு வாங்கி வைத்த பொருட்கள் அழுகுகின்றன என்றார்.
திருவண்ணாமலையில் ஒரு பெண்மணி, வெயில் காலம் என்பதால் தர்பூசணி வியாபாரம் நன்றாக போகும் என 35 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு லோடு தர்பூசணி இறக்கினேன். ஊரடங்கால் போலீஸ் கடையைத் திறக்ககூடாது எனச் சொல்லிவிட்டார்கள். இதைக் கொண்டும் போய் கிராம புறங்களிலாவது சும்மாவே தந்துவிட்டு வருகிறேன் எனச் சொல்லியும் செல்லவிடவில்லை. முதலீடான 35 ஆயிரமும் நஷ்டம் என அழுதார். இதேபோல் திருவண்ணாமலை நகரில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தப் பழங்கள் இன்னும் 5 நாட்களில் முழுவதும் அழுகிவிடும் என்கிறார்கள் முதல் போட்ட ஏழை வியாபாரிகள்.