பாட்டாளி மக்கள் கட்சிக்கு தற்போதைய வயது முப்பது. அதன் 31வது பிறந்த தினம் சில தினங்களுக்கு முன்பு தைலாபுர தோட்டத்தில் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது. 1989ம் வருடங்களுக்கு முன்பு வரை வன்னியர் சங்கமாக இருந்து வந்த அந்த அமைப்பை, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜூலை மாதம் 16ம் நாள் பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றினார் ராமதாஸ். சென்னை கடற்கரையில் அப்போதிருந்த சீரணி அரங்கில் மஞ்சள் கொடிகள் பளபளக்க பாட்டாளி மக்கள் கட்சி அறிவிப்பை வெளியிட்ட மருத்துவர் ராமதாஸ், தன் தொண்டர்களுக்கு சில உறுதி மொழிகளை தந்தார். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நானோ, என் குடும்ப உறுப்பினர்களோ தேர்லில் போட்டியிட மாட்டோம். சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ என் கால் செருப்பு கூட செல்லாது உள்ளிட்ட பல்வேறு உறுதிகளை தொண்டர்களுக்கு அளித்தார். இதில் ஏதேனும் நான் தவறு செய்தால் என்று கூறி, சில தண்டனைகளை எனக்கு தாருங்கள் என்று கூறி அவருக்கே உரிய "தண்டனை"களை தொண்டர்களுக்கு கோடிட்டு காட்டினார்.
அந்த வகையில் அவரின் மிக முக்கிய சத்தியமான என் குடும்ப உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்ற சத்தியம் கடந்த 2004ம் ஆண்டு அவருடைய மகன் அன்புமணி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட போது காற்றோடு பறந்து போனது. நான் சட்டசபைக்கு செல்ல மாட்டேன் என்று அவர் கூறினாலும், கடந்த 2003ம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை சந்தித்த போது அந்த உறுதிமொழி செல்லாக் காசாகிவிட்டது. ஜெயலலிதாவுடன் கூட்டணி முறிந்த பிறகு நான் சட்டப்பேரவைக்கு வரமாட்டேன் என்று கூறியும், என்னை கட்டாயப்படுத்தி வரவைத்தார்கள் என்று ஜெயலலிதாவை விமர்சனம் செய்திருந்தார் ராமதாஸ். இந்நிலையில், 2008ம் ஆண்டு மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை சட்டப்பேரவையில் சந்தித்து 'அரசியல்' பேசினார் ராமதாஸ். இந்த இரண்டு சந்திப்புக்களுமே சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆனால், நாளை சட்டப்பேரவை மைய மண்டபத்தில் நடைபெறும் ராமசாமி படையாச்சியாரின் சிலை திறப்பு விழாவில் ராமதாஸ் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.