மத்திய பா.ஜ.க. மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண்மை சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் ஒரு வருட காலமாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் 27ந் தேதி ஒருநாள் நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தமிழகத்திலும் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்தப் போராட்டத்தில் புதிய வேளாண் சட்டம் மற்றும் மின்சார சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதைக் கைவிடவேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மற்றும் சாலை மறியல் நடைபெறும் என அறிவிப்பு செய்திருந்தனர்.
ஈரோட்டில் விவசாயிகள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களான ஏ. ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யு, சி,பி, எப், எச். எம். எஸ், எம். எல் எஸ், தொ.மு.ச., திமுக விவசாயிகள் அணி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சியினர், தொழிற்சங்கத்தினர் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகக் களம் இறங்கினார்கள்.
ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள கார்னர் பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர்.
அதேபோல் அனைத்து கட்சிகள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. ஈரோடு காளைமாடு சிலை அருகே விவசாய சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் திரண்டுவந்து வேளாண் சட்டங்கள் திரும்பப்பெற வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பெட்ரோல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்தும் பா.ஜ.க.மோடி அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். பின்னர் ரயில் நிலையம் நோக்கி ரயில் மறியலுக்குச் சென்றனர்.
அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறை அவர்களைக் கைது செய்தனர். இதைப்போலப் பெருந்துறை, சென்னி மலை ,கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், நம்பியூர், புஞ்சைபுளியம்பட்டி, தாளவாடி உள்பட 11 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர். போராட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.