கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முன்பு நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் தனியார் பள்ளியின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டது. அதேபோல் காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பல மணி நேரம் போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனவும், தற்போது நடைபெற்றுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்களில் தெளிவு இல்லை என்பதால் இரண்டாவது முறை மாணவியின் உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கள்ளக்குறிச்சி சிறார் சிறப்பு நீதிமன்றம், கள்ளக்குறிச்சி 2 ஆம் எண் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அம்பிகா, 'இளைய சமுதாயம் எதை நோக்கி செல்கிறது? உண்மை எது என தெரியாமல் எதற்கு இந்த போராட்டம்? கள்ளக்குறிச்சி கலவரத்தால் கிடைத்த நீதி என்ன? கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் எதை வேண்டுமானாலும் பதிவு செய்யலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.