
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் கிராமத்தில் பழமை வாய்ந்த அப்பன் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உட்பட பாஜகவினர் தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்வின்போது, அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களைச் சந்தித்து பேசினார். அப்போது பெண்கள் சிலர் நிர்மலா சீதாராமனை சூழ்ந்துகொண்டு, ‘சமையல் எரிவாயு விலை உயர்வு’ குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “நம்ம நாட்டில் சமையல் எரிவாயு நிரப்பக்கூடிய வசதி இல்லை. அதன் காரணமாக அதனை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். இதனால், அங்கு விலை உயரும்போது நமக்கும் இங்கு விலை உயர்கிறது. குறைந்தால் இங்கும் குறையும். ஆனால், கடந்த இரண்டுவருடங்களில் அந்த அளவுக்கு எரிவாயு விலை குறையவில்லை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.