பணி ஓய்வுபெறும் டிஜிபி ராஜேந்திரன் இன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசுகையில்,
பெருமைமிக்க காவல்துறையில் சுமார் 35 ஆண்டுகள் பணிபுரிந்து என்று காவல்துறையின் தலைமை இயக்குனராக பணி நிறைவு பெறும் வேளையில் முதற்கட்டமாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் என்னை காவல்துறையின் தலைமை இயக்குனராக பணியாற்றிய தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை நினைவுகூற விரும்புகிறேன். அதனைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் என்னை காவல்துறையின் தலைமை இயக்குனராகவும், காவல்துறை தலைமை அதிகாரியாகவும் நியமித்த தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது ஒட்டுமொத்த 35 ஆண்டுகால பணிக்காலத்தை சட்டத்துக்கு உட்பட்டும் மனசாட்சிக்கு உட்பட்டு தமிழக அரசின் மனிதநேய கொள்கைகளை கருத்தில் கொண்டு முறையாகவும் சரியாகவும் செய்து முடித்திருக்கிறேன். இன்று உங்கள் அனைவரின் முன்பாக முழு மனநிறைவுடன் அமைதியோடும், மகிழ்ச்சியோடும் நன்றி உரையாற்றுகிறேன். இவ்வாறான சிறப்பான பணியை செயல்படுத்துவதற்கு ஒவ்வோர் ஆண் மற்றும் பெண் காவலர்கள் மற்றும் சக அதிகாரிகள் என்னோடு தோளோடு தோள் நின்று செயலாற்றி உள்ளீர்கள். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் காரணமாக தமிழக அரசு காவல்துறை கட்டளைகளை நம்மால் சரிவர செயல்படுத்த முடிந்துள்ளது. இந்த பணிகளை என்னோடு இணைந்து முழுமனதுடன் செயல்படுத்திய பலவிதமான சிறப்பான செயல்பாடுகளுக்கு வித்திட்ட, வழியமைத்து முடித்துக் கொடுத்த உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த நேரத்தில் சிரம் தாழ்த்தி என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த மூன்றாண்டு காலத்தில் தமிழக காவல்துறை பல சோதனைகளையும், சவால்களையும் சந்தித்துள்ளது. குறிப்பாக சொல்வதென்றால் டிசம்பர் 5, 2014 மக்களுக்கு தாங்கொண்ணா துயரத்தை தந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எதிர்பாராத மறைவும், 2017 தமிழகம் தழுவி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டங்கள் மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் போது தமிழக காவல்துறை மேற்கொண்ட பாதுகாப்பு மற்றும் துயர் துடைக்கும் மறுவாழ்வு பணிகள். அவ்வப்போது நடந்த இடைத் தேர்தலுக்கான காவல் பணிகள், நடந்து முடிந்த நாடாளுமன்றத் பொதுத்தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகள் இதுபோன்று கடந்த மூன்று ஆண்டுகளில் பல விதமான சவால்களை சோதனைகளை தமிழக காவல்துறை சந்தித்துள்ளது எனக் கூறினார்.