மத நம்பிக்கைகளில் தி.மு.க. அரசு தலையிடுவதில்லை என மதுரை ஆதீனத்திற்கு பதில் தரும் வகையில், தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
'அத்துமீறும் மதுரை ஆதீனம் அறிவதற்கு!' என்ற தலைப்பில் முரசொலியில் வெளியாகியிருக்கும் கட்டுரையில் எம்மதத்தவராக இருந்தாலும், அவர்களது மத நம்பிக்கைகளில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டோடு தி.மு.க. செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காஞ்சி ஜெயேந்திரருக்கு என்ன கதி ஏற்பட்டது? அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நிகழ்வுகள் எத்தனை நடந்தன என்பது மதுரை ஆதீனத்திற்கு நினைவிருக்கும். பிரதமர் நரேந்திர மோடியிடம் செல்வேன்; அமித்ஷாவிடம் செல்வேன் என்று பூச்சாண்டிக் காட்டும் மதுரை ஆதீனத்தின் புரிதலுக்காக இதை நினைவூட்டுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும், துறைச் சார்ந்த அமைச்சரும் தமிழகம் அமைதிப் பூங்காவாக அனைத்து மதத்தினரும் அண்ணன், தம்பிகளாக ஒன்றுப்பட்டு வாழ வேண்டும் என்ற நோக்கில் எடுக்கும் முடிவுகள் பலராலும் பாராட்டப்படும் நிலையில், மதுரை ஆதீனகர்த்தர் மட்டும் வெறுப்பு உருவாகும் நிலையில், தொடர்ந்து பேசுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை ஆதீனம் இருப்பது தமிழ்நாடு! என்றும், இந்த மண்ணில் உள்ள பல சைவ ஆதீனங்கள் எந்த சலசலப்பும் இல்லாமல் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர் என்றும் முரசொலி கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மதுரை ஆதீனம் எல்லை மீறுகிறார், பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை அவர் உணர வேண்டும் என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.