கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த 12- ஆம் வகுப்பு மாணவி கடந்த ஜூலை 13- ஆம் தேதி அன்று உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் கூறியதால், தனியார் பள்ளியின் முதல்வர் தாளாளர், செயலாளர் மற்றும் இரண்டு ஆசிரியைகள் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை ஒரு நாள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஐந்து பேரும் ஜாமீன் கேட்டு விழுப்புரத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து அவர்கள் ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் பள்ளி முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேருக்கும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சேலம் மத்தியச் சிறையிலிருந்த பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேரும் ஜாமீனில் கடந்த 31/8/2022 அன்று வெளியில் வந்தனர். பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையிலும், இரண்டு ஆசிரியர்கள் சேலத்திலும் தங்கி இருந்து சிபிசிஐடி போலீசார் முன்பு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் சிறையைவிட்டு வெளியே வந்தனர்.
இந்நிலையில் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வாரத்தில் சனிக்கிழமை மட்டும் ஒரு நாள் ஐந்து பேரும் விழுப்புரம் சிபிசிஐடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து முன்பு கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் தளர்வளித்து உத்தரவிட்டார்.