தமிழகத்தில் கடந்த மே, ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூரில் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து வருகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (30.07.2024) வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “கோவை மற்றும் நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. அதோடு தேனி மற்றும் தென்காசி ஆகிய 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது. அதே சமயம் திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்” என வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (30.07.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே போன்று தொடர் கனமழையால் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று (30.07.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.