Skip to main content

'மீண்டும் சென்னைக்கு ரெட் அலர்ட்'-வானிலை ஆய்வு மையம் விளக்கம்

Published on 16/10/2024 | Edited on 16/10/2024

 

 'Red Alert again for Chennai' - Meteorological Center Explanation

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் சென்னைக்கான ரெட் அலர்ட் திரும்ப பெறப்படும் என கருதப்பட்டது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கொடுத்த அறிவிப்பில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது.

ரெட் அலர்ட் தொடர்வதால் சென்னைக்கு கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என புரிந்துகொள்ளப்பட்ட நிலையில் உடனடியாக வானிலை மையம் அந்த தகவலை நீக்கி இருந்தது. இந்நிலையில் சென்னைக்கு ரெட் அலர்ட் தொடருகிறதா? இல்லையா? என்ற குழப்பம் நீடித்தது. இந்நிலையில் தற்பொழுதும் மீண்டும் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிவிப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இன்றைய தினமும் 'ரெட் அலர்ட்' தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில், ''காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது சின்னப் புள்ளி மாதிரி இருக்காது. அது ஒரு பரந்த பகுதி. ரெட் அலர்ட் என்பது  24 மணி நேரத்திற்கான அலர்ட். சென்னையில் எல்லா பகுதிகளிலும் 20 சென்டி மீட்டருக்கு மழை பெய்யும் என்று கிடையாது. அலார்ட்டாக இருக்க வேண்டியது அவசியம் என்ற காரணத்தால்; காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நோக்கி அருகில் வர இருக்கின்ற காரணத்தால்; தாழ்வு மண்டலம் வலு இழக்காமல் இருக்கும் காரணத்தால் நடவடிக்கை எடுப்பதற்காக, அலர்டாக இருப்பதற்காக ரெட் அலர்ட் கொடுத்துள்ளோம்'' என்று விளக்கம் அளித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்