சேலத்தில் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திச்சென்ற கூலிப்படைக் கும்பலைச் சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள சின்ன கவுண்டனூரைச் சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மகன் பிரபு (38). இவருடைய உறவினர் சூர்யா. இவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். நவ. 24ம் தேதி, தொழில் விஷயமாக பிரபு, சேலத்திற்கு காரில் வந்தார். இடைப்பாடி தங்காயூரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். சேலத்திற்கு வந்த இடத்தில் பிரபுவை ஒரு கும்பல் தங்கள் காரில் கடத்திச் சென்றுள்ளது.
இதுகுறித்து கார் ஓட்டுநர் அருண்குமார் அளித்த தகவலின்பேரில், பிரபுவின் மனைவி சம்பூரணி, சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பெரம்பலூரைச் சேர்ந்த கும்பல், கணவரை கடத்திச்சென்று இருக்கலாம் என்று புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சங்ககிரி காவல்நிலைய ஆய்வாளர் தேவிக்கு மாவட்ட எஸ்.பி. அருண்கபிலன் உத்தரவிட்டார். இதையடுத்து ஆய்வாளர் தேவி தலைமையிலான தனிப்படையினர், கடத்தல் கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரைச் சேர்ந்த ரகுபதி, சக்திவேல் ஆகியோர் பிரபுவுக்கு அவருடைய உறவினர் சூர்யா மூலம் அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து பிரபு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.
ரகுபதி தரப்பினரிடம் இருந்து பிரபு 2 கோடி ரூபாய் பெற்று, அதன்மூலம் தர்மபுரி மாவட்டம் அரூரில் நிலம் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். வீட்டு மனைகள் அனைத்தும் முழுமையாக விற்று முடியாத நிலையில், பணம் கொடுத்த ரகுபதியும், சக்திவேலும் பணத்தைக் கேட்டு பிரபுவுக்குக் குடைச்சல் கொடுத்து வந்துள்ளனர். பிரபுவும் பணத்தை, இப்போது கொடுக்கிறேன், பிறகு கொடுக்கிறேன் என காலம் கடத்தி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரகுபதி, சக்திவேல் ஆகியோர் அவரை கடத்திச்சென்று மிரட்டி பணத்தை வாங்கத் திட்டமிட்டனர். இந்தத் திட்டத்திற்கு பொறுப்பேற்ற சக்திவேல், கூலிப்படை கும்பலுடன் சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் விடுதியின் மதுக்கூடத்தில் இருந்தபடியே, பிரபுவை வியாபாரம் தொடர்பாக பேச வேண்டும் என அழைத்துள்ளனர். அதை நம்பிய பிரபுவும் சம்பவத்தன்று அங்கு வந்தபோது தான், அந்த கும்பல் அவரை காரில் கடத்திச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
நிகழ்விடத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களிலும் அவரைக் கடத்திச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. பிரபுவின் அலைபேசி கோபுர சமிக்ஞைகளை வைத்து, அவர்கள் ஏற்காட்டில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக ஏற்காடு காவல்நிலையத்திற்குத் தகவல் அனுப்பிய தனிப்படையினர், பிரபு மற்றும் கடத்தல் கும்பலின் படங்களையும் அவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைத்தனர்.
விரைவாகச் செயல்பட்ட ஏற்காடு காவல்நிலைய ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன் மற்றும் காவலர்கள், ஒண்டிக்கடை பகுதியில் வைத்து கடத்தல் கும்பலை மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் இருந்து பிரபுவை பத்திரமாக மீட்டனர். விசாரணையில், சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீராமுலு மகன் கண்ணன் (40), வசந்த் (25), கார்த்தி (27), சுரேஷ் (35), பார்த்திபன் (38), மாபு மஷாக் (27) ஆகியோர்தான் பிரபுவை கடத்திய கூலிப்படை என்பதும், ஆலத்தூர் சக்திவேல் அவர்களை கடத்தலுக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது.
பிடிபட்ட ஆறு பேரையும் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட சக்திவேலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.