சேலம் அருகே, ரியல் எஸ்டேட் அதிபர் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட ஐந்து பேருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை விதித்து சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 23, 2018) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வடுகம்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி. விவசாயி. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். தமிழக முன்னாள் டிஜிபி ராமானுஜத்தின் உறவினரான இவருக்கும் சங்ககிரி அருகே மாவலிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான அதிமுகவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும் நிலம் விற்பனை செய்ததில் தகராறு இருந்தது. இது தொடர்பாக அப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, துரைசாமிக்கு சாதகமாக தீர்ப்பும் கிடைத்தது.
இந்நிலையில், கடந்த 2014, டிசம்பர் 17ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற துரைசாமியை, உப்புப்பாளையம் பகுதியில் வைத்து ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது. அந்த கும்பல் துரைசாமியை மூன்று துண்டுகளாக வெட்டி கொலை செய்து, சடலத்தை பவானி ஆற்றில் வீசிவிட்டு தப்பியது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கொலை வழக்கு தொடர்பாக ராமச்சந்திரன், அவருடைய கார் ஓட்டுநர் சண்முகம், குமாரபாளையத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் கருவாமணி, சுப்ரமணி, மஞ்சுநாதன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். ஐவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை, சேலம் மாவட்ட இரண்டாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதுதரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராமச்சந்திரன் உள்பட ஐந்து பேருக்கும் தலா மூன்று ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து அவர்கள் ஐந்து பேரும் பலத்த பாதுகாப்போடு கோவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கொலை குற்றவாளிகள் அனைவருக்கும் கடந்த 43 மாதங்களாக ஜாமின் வழங்காமல் தீர்ப்பு அளிக்கப்பட்டது சேலத்தில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Published on 24/08/2018 | Edited on 25/08/2018