Skip to main content

குழந்தைகள் விற்பனை விவகாரம்: மேலும் 3 பேர் கைது! 2 வக்கீல்களும் சிக்குகின்றனர்!!

Published on 28/04/2019 | Edited on 28/04/2019

 


ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் மேலும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், நாமக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இரண்டு பேருக்கு நேரடி தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

 

c


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் செவிலியர் உதவியாளர் (எப்என்ஏ) அமுதா (50) என்கிற அமுதவல்லி, வறுமையில் வாடும் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தையில்லா தம்பதிகளிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்த விவகாரம் அண்மையில் அம்பலமானது. இது தொடர்பாக  விசாரித்த நாமக்கல் மாவட்ட காவல்துறை, அமுதா, அவருடைய கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலையில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்த முருகேசன் ஆகிய மூன்று பேரையும் ஏப்ரல் 26ம் தேதி கைது செய்தனர்.

 

c


மூவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கும்பலுடன் மேலும் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணையை மேற்கொண்டனர். இதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களும், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. 


இந்த கும்பல் பெரும்பாலும் கொல்லிமலையில் உள்ள பழங்குடி மக்களை குறி வைத்து செயல்பட்டு வந்துள்ளனர். அங்கு இரண்டுக்கும் அதிகமான குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்களை வளர்க்க முடியாமல் கஷ்டத்தில் உள்ள பழங்குடிகளை அணுகி, அவர்களிடம் ஆசைவார்த்தை கூறி சொற்ப விலைக்கு குழந்தைகளை வாங்கி, குழந்தையில்லா தம்பதிகளிடம் லட்சக்கணக்கில் பணத்தை கறந்து கொண்டு விற்றுள்ளனர். வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்குக்கூட பெண் குழந்தைகளை பேரம் பேசி வாங்கியுள்ளனர். 


யார் யார் வீட்டில் புதிதாக குழந்தைகள் பிறந்துள்ளன? பொருளாதார நெருக்கடியில் உள்ள பழங்குடியின தம்பதிகள் யார் யார்? என்ற விவரங்களை எல்லாம் சேகரித்துக் கொடுப்பது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசனின் வேலையாக இருந்துள்ளது. அதன்பின்னர் அமுதாவும், அவருடைய கணவரும் சம்பந்தப்பட்ட தம்பதிகளை அணுகி, குழந்தையைக் கொடுத்து விடுமாறு பேரம் பேசுகின்றனர். குழந்தையைக் கொடுக்க சம்மதிக்கும் பெற்றோரிடம், அவர்களிடம் உள்ள மற்ற குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்வதாகவும் போலி வாக்குறுதிகளும் அளித்துள்ளனர்.


அமுதா தரப்பு குழந்தையைக் கையில் வாங்கியதும், அதுகுறித்து ஈரோட்டைச் சேர்ந்த பர்வீன், அருள்சாமி, ஹசீனா ஆகியோருக்கு தகவல் கொடுக்கிறார். அவர்கள் மூவரும் அமுதாவுக்கு அடுத்தக்கட்டத்தில் உள்ள இடைத்தரகர்கள். இந்த மூவரும்தான் குழந்தையில்லா தம்பதிகளிடம் லட்சக்கணக்கில் பணத்தைக் கறந்து கொண்டு குழந்தையை ஒப்படைக்கும் வேலைகளைச் செய்து வந்துள்ளனர். 

 

c


சேலம், ஈரோடு, கோவை, வேலூர் ஆகிய ஊர்களில் உள்ள குழந்தையில்லா தம்பதிகளிடம் இவ்வாறு 12 குழந்தைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளதும் காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. பர்வீன், அருள்சாமி, ஹசீனா ஆகியோரை குழந்தைகள் விற்கும் தரகர்கள் என்று மட்டுமே காவல்துறை தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் அவர்களின் முழு பின்னணி குறித்து ஏனோ காவல்துறை தரப்பில் வாய் திறக்க மறுக்கின்றனர்.


அமுதா, தொடர்ந்து சுகாதாரத்துறையில் செவிலியர் உதவியாளராக இருந்ததால், அவருக்கு பல தனியார் மகப்பேறு மருத்துவமனைகள், மருத்துவர்களுடனும் நல்ல தொடர்பை ஏற்படுத்தி வந்திருக்கிறார். பணியின்போதே சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பும் தரகு வேலையும் செய்துள்ளார். அதனால்தான், ஓய்வு பெற்ற பிறகும் சுதாராத்துறை தொடர்பை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் சம்பாதிக்க முடியும் என்ற தொழில் நுணுக்கத்தையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார்.


குழந்தைகளை விற்பனை செய்வது மட்டுமின்றி, செயற்கை கருத்தரிப்பு மைங்களுக்கு கருமுட்டை தானம் கொடுக்கும் பெண்களை பிடித்துக் கொடுக்கும் தரகு வேலையும் அமுதா செய்து வந்துள்ளார். கருமுட்டை தானம் செய்யும் பெண்களை கொண்டு வந்து அறிமுகப்படுத்துவதன் மூலம் மருத்துவர்களிடம் அமுதா ரூ.12000 முதல் ரூ.20000 வரை கமிஷனாக வாங்கியுள்ளார். அதிலிருந்து கருமுட்டை தானம் கொடுக்கும் பெண்ணுக்கு ரூ.5000 முதல் ரூ.7000 வரை கமிஷன் கொடுத்துள்ளார் அமுதா. 


கருமுட்டை தானம் செய்வதற்காக கணவரை பிரிந்து தனியாக வசிக்கும் பெண்கள், கணவரை இழந்த பெண்களை குறி வைத்து அவர்ளை மூளைச்சலவை செய்துள்ளார் அமுதா. செயற்கை கருவூட்டலிலும் குழந்தை வரம் கிடைக்காத பெண்களுக்கு வலை விரிக்கும் அமுதா, அவர்களிடம் லட்சக்கணக்கில் வசூலித்துக்கொண்டு சட்ட விரோதமாக குழந்தைகளை விற்பனை செய்துள்ளார். அவ்வாறு குழந்தைகளை விற்பனைக்கு வாங்கிய சில தம்பதியும்கூட அண்மைக்காலமாக அமுதாவுக்கு தரகு வேலை பார்த்துள்ள அவலமும் நடந்துள்ளது.


இதையடுத்து துணை தரகர்களாக செயல்பட்டு வந்த பர்வீன், அருள்சாமி, ஹசீனா ஆகிய மூவரையும் சனிக்கிழமை (ஏப்ரல் 27) கைது செய்தனர். குழந்தையை விற்பனை செய்யும் இந்த கும்பல், சட்டப்படியாகத்தான் எல்லாம் நடக்கிறது என்பதைப்போல நாடகமாட, சின்ன முதலைப்பட்டியைச் சேர்ந்த நோட்டரி வழக்கறிஞர் வெங்கடாசலம் என்பவரிடம் இருந்து தத்து கொடுப்பவர், தத்து பெறுபவர் ஆகியோரின் புகைப்படங்களை ஒட்டிய பத்திரத்தில் கையெழுத்து பெற்று கொடுத்துள்ளனர். 


இதற்கு நாமக்கல்லைச் சேர்ந்த லோகேஷ் என்ற வழக்கறிஞரும் உடந்தையாக செயல்பட்டு வந்துள்ளார். அருள்சாமி அளித்த வாக்குமூலத்தின்படி, லோகேஷிடம் இருந்து சில தத்து ஆவணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விரைவில் இவ்விரு வழக்கறிஞர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.   எனினும், இதுவரை சட்ட விரோதமாக குழந்தைகளை வாங்கியவர்கள் யார் யார் என்ற விவரங்கள் கிடைக்கவில்லை. அவர்களை அடையாளம் காணும் பணிகளிலும் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்