
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஏஐ டீப் ஃபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், இதற்குப் பல்வேறு பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். போலி வீடியோ தொடர்பாகச் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மட்டுமல்லாது ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், ''தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்னொரு நபருடைய புகைப்படத்தை இந்த மாதிரியாக சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பிரபலங்களை மட்டும் அல்ல சாதாரண பெண்மணிகளை கூட பாதிக்கிறது. நிறைய இடங்களில் பெண்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை எடுத்து அதை மார்பிங் செய்து இதுபோன்று ஏஐ டீப் ஃபேக் செய்த வீடியோ உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.
நான் சக பெண்மணிகளுக்கு சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால், தப்பு நடந்து விட்டது என்று தெரிந்தால் அதற்கு அசிங்கப்பட வேண்டியதோ மன உறுதி இழக்க வேண்டியதோ நாம் அல்ல. இதில் அவமானப்படுவது நாம் அல்ல. இதை செய்பவர்களை நாம் முன்னே நிறுத்த வேண்டும். இதுபோன்ற தகவல்களை சரியான முறையில் காவல்துறையிடம் பகிர்ந்து கொண்டு பாதுகாப்பை வளர்ப்பதற்கு முன்னால் நாம் மன தைரியத்தை வளர்த்துக் கொள்வதால்தான் இந்த தொழில்நுட்ப முறைகேடுகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்'' என்றார்.