Skip to main content

“உச்சநீதிமன்றத்தில் தடை பெற முடியாவிட்டால் புதிய சட்டம் இயற்றுங்கள்” - ராமதாஸ்

Published on 27/03/2025 | Edited on 27/03/2025

 

ramadoss said If you can't get a ban on online gambling SC, enact a new law

ஆன்லைன்  சூதாட்டத்தால் 86 பேர் தற்கொலை: உச்சநீதிமன்றத்தில் தடை பெற முடியாவிட்டால் உடனடியாக புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராம்தாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “திண்டுக்கல் மாவட்டம் செந்துறை குரும்பம்பட்டியைச் சேர்ந்த  மகேந்திரன் என்ற பால் வணிகர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மகேந்திரனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.2 லட்சத்துக்கும் கூடுதலாக பணத்தை இழந்த மகேந்திரன், அதை அடைக்க முடியாமல் ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.  ஒரு மாதத்திற்கு பிறகு  பாலக்குட்டு என்ற மலை உச்சியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் எத்தகைய துயரங்களை அனுபவிக்க நேரிடும் என்பதற்கு மகேந்திரனின் நிலை தான் எடுத்துக்காட்டு ஆகும்.

மகேந்திரனையும் சேர்த்து ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை  86 ஆக  அதிகரித்திருக்கிறது. திமுக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 26 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதில் மட்டும்  ஆர்வம் காட்டும் தமிழக அரசு, ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளை தடுப்பதற்காக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து 15 மாதங்களாகின்றன. ஆனால், இதுவரை தமிழகத்தின் மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு அந்த வழக்குகளை விரைவாக விசாரணைக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசை தடுப்பது எது? என்பது தெரியவில்லை.

இனியும் எவரும் ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளாத வகையில், உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை  விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து  ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தடை பெறுவது சாத்தியமில்லை என்றால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்