Skip to main content

“கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 02/04/2025 | Edited on 02/04/2025

 

Ramadoss insists Creamy layer income limit should be increased to Rs. 16 lakh

கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளின்படி பார்த்தால், 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு 2026-ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக கிரிமீலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒரே ஒருமுறை கூட  கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பயனடைவதை உறுதி செய்யும் வகையில், கிரீமிலேயர் பிரிவினரை தீர்மானிப்பதற்கான ஆண்டு வருமான வரம்பை இப்போதுள்ள ரூ.8  லட்சத்திலிருந்து கணிசமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஓபிசி வகுப்பினரின் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

கிரீமிலேயர் வருமான வரம்பு சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் கடந்த 8 ஆண்டுகளாக இந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. இதனால், ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பெறுவதில் பல சிக்கல்கள் ஏற்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி கடந்த ஐந்தாண்டுகளாக கூறி வரும் நிலையில் தான் நாடாளுமன்ற நிலைக்குழு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது.

2020ஆம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாகவும், கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியம் மற்றும் வேளாண்மை வருவாயையும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற வல்லுனர் குழு பரிந்துரையை செயல்படுத்துவதற்கு எழுந்த எதிர்ப்பு  காரணமாகவும் அம்முயற்சி தடைபட்டது. அதற்குப் பிறகு 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த ஆண்டில் அதற்கான முயற்சிகளைக் கூட மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமான உண்மை.

2017ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 8 ஆண்டுகளில் பணவீக்கம் கடுமையாக உயர்த்திருக்கிறது; அதை சமாளிக்கும் வகையில் பல்வேறு ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானமும் உயர்ந்துள்ளது. அதற்கு இணையாக கிரீமிலேயர் வரம்பு 2020ஆம் ஆண்டில் ரூ.12 லட்சமாகவும், 2023ஆம் ஆண்டில் ரூ.15 லட்சமாகவும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படாததால் கடந்த சில ஆண்டுகளில் வருவாய் அதிகரித்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கிரீமிலேயர்களாக கருதப்பட்டு, இட ஒதுக்கீட்டு வரம்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர். இதை விட பெரிய சமூக அநீதி இருக்க முடியாது.

கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளின்படி பார்த்தால், 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு 2026-ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக கிரிமீலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒரே ஒருமுறை கூட  கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படவில்லை. இப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவே இது குறித்து பரிந்துரை செய்திருக்கும் நிலையில், அதை ஏற்றி மாநில அரசுகளுடனும், ஓபிசி அமைப்புகளுடனும் பேச்சு நடத்தி கிரீமிலேயர் வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்