சிவகாசியில் அமைந்துள்ள விசுவநாதர் – விசாலாட்சியம்மன் திருக்கோவில், 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. வடக்கே வட காசி, தெற்கே தென்காசி, நடுவே சிவகாசி எனப் பெயர் வரக் காரணம், இந்தக் கோவில்தான்.
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்தக் கோவிலின் கருவறையில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சிலைகள் உள்ளன. வெளி பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விநாயகர், தட்சணாமூர்த்தி, துர்க்கைஅம்மன், பைரவர், 63 நாயன்மார்கள் சிலைகள், நவகிரகங்கள் அமைந்துள்ளன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு தினமும் வந்து வழிபடுகின்றனர்.
இத்தனை பிரசித்தி பெற்ற இக்கோவிலின் நுழைவு வாயிலில் சிறிய கோபுரமே உள்ளது. அதனால், ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென, பக்தர்கள் தரப்பில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தொல்லியல்துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு, அரசிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ராஜகோபுர பணிகளை விரைவில் தொடங்கும் வகையில், சிவகாசி விசுவநாதர் – விசாலாட்சியம்மன் கோவிலில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும், தமிழக அரசின் அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி தட்சணாமூர்த்தியும் ஆய்வு மேற்கொண்டனர். கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, ராஜகோபுரம் அமையும் இடத்தை ஆய்வு செய்தனர். கோவில் கருவறையிலிருந்து, இந்து ஆகம விதிப்படி, ராஜகோபுரம் கட்டுவதற்கான இடத்தையும் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து, கோவிலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டார்.