தமிழகம் மற்றும் புதுவையில் டிசம்பர் 4 முதல் ஆறாம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மையம் இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகரும் நிலையில் வரும் டிசம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய தொடங்கும்.
நான்காம் தேதியை பொருத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர பகுதிகளில் அனேக இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழகம் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளது.
கனமழை பொருத்தவரையில், டிசம்பர் 4-ஆம் தேதி கடலோரம் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், டிசம்பர் 5ஆம் தேதி வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் டிசம்பர் 4 5 6 ஆகிய தேதிகளில் ஒரு சில முறை மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.