கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையாநத்தம் ஊராட்சி பெரியகுப்பம் கிராமத்தில் பல வருடங்களாக மழைக்காலங்களில் மழைத்தண்ணீர் வடிகால் இல்லாததால் தெரு முழுவதும் தண்ணீர் தேங்குகிறது. கனமழை பெய்யும் பொழுது மழைத்தண்ணீர் வீட்டிற்குள் தண்ணீர் வருகிறது. இதனை பல முறை மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்த வருடமும் தற்போது பெய்து வரும் மழையால் தண்ணீர் குடியிருப்பு மற்றும் வீட்டிற்குள் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். யாரும் வந்து பார்க்கவில்லை என்பதால் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு அருகில் உள்ள சேத்தியாத்தோப்பு - விருத்தாசலம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி கூறுகையில், ‘மழைக்காலம் முடிந்த பிறகு அந்த பகுதியில் வடிகால் வசதி நிரந்தரமாக ஏற்படுத்தித் தரப்படும்’ என்றார்.