சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் பள்ளிச்சிறுமி ஒருவர் தனது தாய் மற்றும் சகோதரனுடன் சாலையில் நடந்து சென்றபோது, பசு மாடு ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென சிறுமியை முட்டி தூக்கி வீசியது. மாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட சிறுமியை மாடுகள் கடுமையாகத் தாக்கின. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, மாட்டை விரட்டி சிறுமியைக் காப்பாற்றினர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், “சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது வெளியில் திரியும் மாடுகளைப் பிடிக்க மாநகராட்சி சார்பில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் மாடுகளைத் திரிய விடும் உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது'' என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பொது இடங்களில் அலட்சியமாக மாடுகள் சுற்றித் திரிவது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சாக்கடை பகுதியில் நீரில் இறங்கியபடி நின்ற மாட்டை சுட்டிக்காட்டி அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது, ''இதுபோன்று திரிகின்ற மாட்டின் நிலைமையைப் பாருங்கள். சாக்கடைக்குள் நின்று கொண்டு அந்த நீரை குடிக்கிறது. இதிலிருந்து வரக்கூடிய பாலை இன்னமும் ஹோட்டல்கள் வாங்குகிறார்கள். தனி நபர்கள் எல்லாம் கறந்த பாலை வாங்குகிறோம் என்று தவறுதலான போக்கில் நடந்து வருகிறார்கள். நாம் வளர்ந்த நகரம் என்று வேற சொல்கிறோம். மாட்டிற்கும், கன்றுகுட்டிக்கும் நாம் எதிரானவர்கள் கிடையாது. அதை சரியாக பராமரித்து வைக்கக்கூடிய நிலையில் இல்லை என்பதை பொதுமக்களும், மாட்டை வளர்ப்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
விதண்டாவாதம் செய்து பேருந்தில் விபத்து ஏற்படுவதால் பேருந்து சேவையை நிறுத்த முடியுமா என்ற கேள்வி எழுப்புவது போல் பேசக்கூடாது. மாடுகளை சரியான கொட்டகையில் அடைக்க வேண்டும்; சரியான தீனி போட வேண்டும். அப்படி இல்லாமல் இப்படி தெருவில் விட்டால் எப்படி. அதேபோல் வீட்டில் இருக்கும் குப்பைகளை எடுத்து இப்படி தெருவோரத்தில் போட்டு விடுகிறார்கள். இதனை அகற்றுவது மாநகராட்சியின் வேலையா? 18 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் இருக்கிறார்கள். இங்கு 70 லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொரு நபரும் 500 கிராம் குப்பையை போட்டால் 6100 மெட்ரிக் டன் குப்பையை தினமும் நாம் அள்ளிக் கொண்டிருக்கிறோம். பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஒவ்வொருத்தரும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். நிறைய பேர் சொல்வது நியாயமான கருத்துகள் தான். ஆனால் அதே நேரத்தில் நாம் வளரும் மாநகரம். உலக அளவில் வளர வேண்டும் என்றால் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'' என்றார்.