Skip to main content

வாய்க்கா தண்ணிய எடுத்து சமைச்சாங்க... நேரில் பார்த்தேன்... மக்களை யாரும் தூண்டல...: கலங்கும் இரா.முத்தரசன் (சிறப்பு பேட்டி)

Published on 21/11/2018 | Edited on 21/11/2018


 

muththarasan


கஜா புயல் கோரதாண்டவத்தின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட மக்கள். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனை சந்தித்து, மக்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்றோம். கலங்கியப்படியே பேச ஆரம்பித்தார்...
 

15ஆம் தேதி இரவு, 16ஆம் தேதி விடியற்காலை வீசிய கஜா புயலின் தாக்கம் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இதுவரை வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

புயலுக்கு 4 நான்கு நாளைக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாக சொன்னார்களே தவிர, அரசு நிர்வாகம் மந்த நிலையில்தான் இருந்தது. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை எடுக்கவில்லை.

 

muththarasan


120 கி.மீ. வேகத்தில் புயல் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. புயல் அடித்தால் மின்சாரம் போய்விடும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். முன்கூட்டியே ஜெனரேட்டர்களை மற்ற மாவட்டங்களில் இருந்து வரவழைத்திருக்கலாம். செய்யவில்லை. 
 

குடிநீர் மிக முக்கியமாக பிரச்சனை. முன்கூட்டியே குடிநீர் ஏற்பாடு செய்து வைத்திருக்கலாம். நான் ஆய்வு செய்த எந்த ஊரிலும் குடிநீர் கிடையாது. மேல்நிலைத் தொட்டிகள் உள்ளது. அதனை நிரப்பி வைத்திருக்கலாம். அதனை செய்யவில்லை. 
 

முகாம்களில் தங்கலாம் என்று சொல்லிவிட்டார்கள். அந்த முகாம்களில் அரிசியை கொடுத்துவிட்டார்கள். சமைப்பதற்காக எந்த மளிகைப்பொருட்களும் இல்லை. முகாமில் உள்ள மக்களிடம். ''என்னிடம் இவ்வளவுதான் இருக்கிறது. நீங்களே மேற்கொண்டு போட்டு சமைத்துக்கொள்ளுங்கள் என்று வி.ஏ.ஓ. கூறுகிறார். 

 

gaja


 

ஒரு வி.ஏ.ஓ.வுக்கு நான்கு வருவாய் கிராமங்கள் பொறுப்பு என போட்டுள்ளார்கள். அந்த வி.ஏ.ஓ. இந்த முகாம்களுக்கு மாறி மாறி போவதற்கு நேரமும் இல்லை. மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுக்க அவரிடம் பணமும் இல்லை. ''என்னிடம் பணம் இல்லை. நான் என்ன செய்ய முடியும்'' என்று அவர் மக்களிடம் சொல்லுகிறார். எல்லா இடத்திலும் அதுதான் நிலைமை. 
 

முகாமில் இருப்பவர்களுக்கு பாய், தலையணை, போர்வை கொடுத்தாக முதல் அமைச்சர் அறிவிப்பில் இருக்கிறது. ஆனால் எங்கேயும் கொடுக்கப்படவில்லை. அடிப்படைத்தேவை முக்கியத்தேவை குடிநீரையே அவர்கள் கொடுக்கவில்லை. 
 

6 நாளுக்கு மேல் ஆகிவிட்டது. மக்கள் தவித்துப்போய் இருக்கிறார்கள். மின்சாரம் இதுவரை வராத கிராமங்கள் ஏராளமாக உள்ளன. இனி எப்போது வரும் என்றும் சொல்ல முடியாது. 

 

gaja


 

நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பித்து கிடக்கிறது. முன்னேற்பாடுகளை செய்யுங்கள் என்று அதிகாரிகளுக்கு எந்த அறிவுரையும் முறையாக வழங்கப்படவில்லை. பிரச்சனையே என்னவென்றால் கிராமங்களுக்கு அதிகாரிகள் வரவில்லை என்பதுதான்.
 

மக்களை சந்திக்கவே அதிகாரிகள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், முதல் அமைச்சர் என எல்லோரும் அச்சப்படுகிறார்கள். மக்கள் கேட்கம் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். மக்கள் கேள்வி கேட்டால் என்ன செய்வது என்றுதான் முதல் அமைச்சர் தனது பயணத்தை பாதியில் முடித்து திரும்பினார்.
 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் என முதல் அமைச்சர் சொல்வது உத்தேச கணக்கு. பல கிராமங்களுக்கு அதிகாரிகளே செல்லவில்லை. பிறகு எப்படி கணக்கு எடுக்க முடியும். பல லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மா, தென்னை, பலா, எலுமிச்சை, தேக்கு, சவுக்கு, முந்திரி இப்படி எல்லாமே முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. அறுவடைக்கு தயாராக இருந்த வயல் பகுதிகள் முற்றிலும் நாசமாகிவிட்டது. 
 

குடிசை வீடுகள் அனைத்தும் சேதமாகியுள்ளது. அதேபோல் ஓட்டு வீடுகள், தகரம் போட்ட வீடுகள் முற்றிலும் சேதமாகியுள்ளது. கான்கிரீட் வீடுகள் மீது மரங்கள் விழுந்து சேதமாகியுள்ளது. அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீடுகள் முற்றிலும் சேதமாகியுள்ளது. 

 

gaja


 

கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டு நிவாரணம் கொடுப்பதுபோல போட்டோவுக்கு போஸ் கொடுக்க நினைத்தார்கள். ஆனால் நிர்வாகத்தை முறைப்படுத்தி நிவாரணங்களை வழங்கவில்லை. அரசு இயந்திரத்தை அவர்களுக்கு பயன்படுத்த தெரியவில்லை. போதிய அக்கறை செலுத்தவில்லை. இதனால் மக்கள் தன்னெழுச்சியாக கோபப்பட்டு சாலை மறியல், போராட்டம் நடத்துகிறார்கள்.
 


புயல் பாதித்த இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு செய்யும் போது பொதுமக்கள் என்ற போர்வையில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியிருக்கிறாரே?
 

அது முற்றிலும் தவறானது. நான் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு சென்று நேரில் பார்த்ததை சொல்லுகிறேன். 
 

எல்லா ஊரிலேயும் மக்கள் சொன்னது, எந்த அதிகாரியும் வரவில்லை என்பதுதான். குடிக்க தண்ணீர் இல்லை, குழந்தைகள் அழுகிறது அவர்களுக்கு கொடுக்க பால் இல்லை. முகாமில் அரிசி மட்டும் கொடுக்கிறார்கள் என்றுதான். 

 

gaja


நாகப்பட்டிணம் மாவட்டம், திருப்பூண்டியில் வாய்க்காலில் தண்ணீர் தேங்கி நின்றது. வாய்க்கா தண்ணிய எடுத்து சமைச்சாங்க. அதனை நேரில் பார்த்தேன். இந்த தண்ணியில் சமைக்காதீங்கன்னு நான் சொன்னேன். அதற்கு, வேற என்ன பண்ண சொல்றீங்க. டேங்கில் தண்ணீர் இல்ல. கரெண்ட் இல்ல, அதிகாரிகள் யாரும் வரவேயில்லை. பசிக்கிறது என பிள்ளைகள் அழுகிறது என்கிறார்கள். புளியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, சாப்பாட்டில் போட்டு பசைந்து எல்லோருக்கும் கொடுக்கிறார்கள். எல்லா முகாம்களிலும் ஒரு வேலைக்குத்தான் சாப்பாடு. மூன்று வேலைகளுக்கும் சாப்பாடு இல்லை. 
 

ஏற்கனவே கடந்த காலங்களில் புயல் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலமாக சென்னை, புதுச்சேரியில் தயார் செய்யப்பட்ட உணவு பொட்டலங்களை கொண்டு சென்று வழங்குவாகர்கள். அதுவும் இந்த அரசு இப்போது செய்யவில்லை. 
 

முகாம்களில் இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். மெழுகுவர்த்தி ஒன்று 100 ரூபாய்க்கு விற்கிறார்கள். மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை. 
 

அதிராம்பட்டினத்தில் மறியல் செய்தவர்களை சந்தித்தோம். அதிகாரிகள் ஒரு மணி நேரத்தில் எல்லா தேவைகளையும் நிறைவேற்றுவோம் என்று சொன்னார்கள். 4 மணி நேரம் ஆகிவிட்டது. எந்த தகவலும் இல்லை. அதனால் மீண்டும் மறியல் செய்கிறோம் என்றனர். 
 

மக்களை யாரும் தூண்டிவிடவில்லை. மக்கள் தானாக போராடுகிறார்கள். மக்களை எப்படி மீட்க முடியும் என்று எல்லோரும் நினைக்கிறோமே தவிர, அவர்களை தூண்ட வேண்டிய அவசியம் இல்லை. தம்பிதுரை சொன்னது முற்றிலும் தவறான கருத்து. 
 

அரசு இயந்திரம் முற்றிலும முடங்கிப்போய் கிடக்கிறது. அரசு இயந்திரத்தை பயன்படுத்த இவர்களுக்கு தெரியவில்லை. இவர்களால் பயன்படுத்த முடியவில்லை. அரசு இயந்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இவர்கள் சிந்திக்கவில்லை. சேலத்தில் முதல் அமைச்சரை வருக வருக என பேனர் வைத்து விழா கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அதில் முதல் அமைச்சர் பங்கேற்கிறார். 
 

இந்த மாதிரி பாதிப்புகள் வந்தபோது காமராஜர் நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளார். கலைஞர் சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆர். சென்றிருக்கிறார். நாகை, வேளாங்கண்ணி, நாகூரில் சுனாமி தாக்கியபோது ஜெயலலிதா மூன்று முறை காரில் சென்றுள்ளார். எம்எல்ஏக்களை அழைத்து பணத்தை பற்றி கவலைப்படாதீர்கள். கலெக்டரிடம் என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். அவர்கள் கேட்கவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள் என்று சொன்னார். நாகப்பட்டிணம் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை ஒவ்வொரு வார்டாக சென்று பார்த்தார். மக்களுக்கு என்ன வேண்டுமோ அதனை செய்யுங்கள் என்று சொன்னதை நான் நேரில் பார்த்தேன். 
 

இதுபோன்ற சமயங்களில் கலைஞர் வேட்டியை மடித்து கட்டிக்கொணடு வேலை செய்ததை பார்த்திருக்கிறோம். 77ல் புயல் வந்தபோது ஹெலிகாப்டரில் நாகை வந்து, அங்கிருந்து காரில் எல்லா இடங்களுக்கும் சென்று எம்ஜிஆர் பார்வையிட்டார். மக்கள் மீது அக்கறை இருந்தால் ஆட்சியாளர்கள் தானாக முன்வந்து உதவிகளை செய்வார்கள். இவர்கள் எங்கு எப்படி சம்பாதிக்கலாம் என்ற கணக்கிலேயே நிற்கிறார்கள். 

 

 


 

சார்ந்த செய்திகள்