புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலக உதவியாளராக இருந்த திருக்கட்டளை மாரிமுத்து கடந்த மாதம் 28 ந் தேதி மாலை முதல் காணவில்லை. 29 ந் தேதி அவரது கார் திருவரங்குளம் அருகே தைலமரக்காட்டில் எரிந்து கிடந்தது. காருக்குள் கவரிங் நகைகளும், கணினி பொருட்களும் எரிந்து கிடந்தது. அந்த காரை பார்த்த அவரது மனைவி ராணி அது மாரிமுத்துவின் கார் தான் என்பதை உறுதிப்படுத்திய பிறகு தனது கணவரை காணவில்லை என்று புகார் கொடுத்தார்.
அதன் பிறகு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த நகைகள் காணவில்லை என்று தகவல்கள் வெளியானது. ஆனால் 6 நாட்கள் வரை புகார் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு 90 கி.மீ தள்ளி மணமேல்குடி கோடியக்கரை கடலில் ஒரு அழுகிய ஆண் சடலம் கரை ஒதுங்கியதை பார்த்து அது மாரிமுத்துவாக இருக்கலாமா என்ற சந்தேகத்தில் அவரது மனைவி ராணியை அழைத்துச் சென்று அந்த சடலத்தில் கிடந்த சட்டையை காட்டிய போது அது மாரிமுத்துவின் சடலம் தான் என்று கதறி அழுதார் ராணி. அப்போதே.. காணாமல் போன நாளில் இரவில் என்னிடம் போனில் பேசினார். நான் உங்களை நல்லா வச்சிக்கல.. நான் இனி வரமாட்டேன்னு சொன்னார். ஆனால் அருகில் யாரோ இருந்து கொண்டு அவரை அப்படி பேச வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு அவரது செல்போன் வேலை செய்யவில்லை. அதனால் யாரோ திட்டமிட்டு என் கணவரை கொலை செய்திருக்கிறார்கள் என்றார்.
இந்த நிலையில் 6 நாட்களுக்கு பிறகு வங்கி முதுநிலை மேலாளர் மாரீஸ் கண்ணன் கொடுத்த புகாரில்.. வாடிக்கையாளர்களிடம் அடகு வாங்கிய நகைகள் 13.75 கிலோ வை இறந்த மாரிமுத்து எடுத்து சென்றுவிட்டதாக கூறியிருந்தார். இந்த நிலையில் தான் வாடிக்கையாளர்கள் வங்கியில் முற்றுகையிட்டு எங்கள் நகைகள் வேண்டும் என்று கேட்கும் போது பணம் தருவோம் என்று பதில் சொல்லி அனுப்புகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் பெரிய இழப்பை சந்திக்க உள்ளனர்.
தொடர்ந்து டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையிலான போலிசார் விசாரனை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் கடந்த 2013 ம் ஆண்டு முதல் நகைகள் திருடப்பட்டு வந்தது தெரியும். ஆனால் நகை பாக்கெட்டுகள் இருந்தது. அதனால் உரசிப் பார்க்கவில்லை. அது போலி நகைகள் என்றது தெரிகிறது. எல்லாமே இறந்த மாரிமுத்து தான் செய்திருக்க வேண்டும் என்று முதல் கட்ட விசானையில் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் தான் மாரிமுத்து இறப்பு கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகம் இருந்த நிலையில். வங்கி நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள மாரிமுத்துவை கொன்று கடலில் வீசி இருக்கலாம் என்ற சந்தேகத்தை நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதே போல சடலம் கிடந்த இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் மாரிமுத்துவின் கழுத்து பகுதியில் உள்ள எழும்புகள் உடைந்திருப்பதை ஆய்வு குழுவினர் உறுதி செய்துள்ளனர். மேலும் மாரிமுத்துவின் இறப்பு எப்படி நடந்தது என்பதை அறிய உடல் உறுப்புகள் ரசாயன சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல் சோதனையில் கொலை என்பதை உறுதிப்படுத்தி இருப்பதால் போலிசார் இனி மாரிமுத்துவை கொலை செய்தது யார்? நகைகளை திருடியது யார், எதற்காக மாரிமுத்து கொலை செய்யப்பட்டார் என்ற பல கோணங்களிலும் விசாரணையை துரிதப்படுத்த வேண்டியுள்ளது.