புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் தி.மு.க சார்பில் முன்னாள் தி.மு.க தலைவர் கலைஞர் பிறந்தநாள்விழா மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திருரங்குளம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் மேற்கு ஒன்றியச் செயலாளர் தங்கமணி, முன்னால் ஒன்றியச் செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. நகரச் செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர் சரத்பாலா கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் கலந்து கொண்டு பேசியதாவது.. திருவாரூர் முதல் காரைக்குடி வரை உள்ள ரயில் பாதை பணிகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி நிதி ஒதுக்கி இருந்தார். ஆனால் காலங் கடந்து பணிகள் நடந்து முடிந்தாலும் அதில் ரயிலை இயக்க முடியாமல் தவிக்கிறார்கள். அதாவது ரயில்வே கேட்களுக்கு திறந்து மூட ஊழியர் நியமனம் செய்யாமல் ரயிலில் பயணிக்கும் ஊழியர்களே திறந்து மூடுவதால் 3 மணி நேரத்தில் செல்ல வேண்டிய ரயில் 7 மணி நேரம் ஆகிறது.
கொத்தங்கலம், கீரமங்கலம். வடகாடு, சேந்தன்குடி இளைஞர்கள் தங்கள் சொந்த செலவில் குளங்களை சீரமைத்து வருகிறார்கள். இதைப் பார்த்து தமிழக அரசு காலங்கடந்து தற்போது குடிமராமத்துக்கு நிதி ஒதுக்கி உள்ளது. அதில் ஆலங்குடி தொகுதியில் உள்ள குளங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. கடந்த ஆண்டு ஒதுக்கிவிட்டார்கள். அதனால் இந்த ஆண்டு ஆலங்குடி தொகுதியில் உள்ள குளங்களையும் குடிமராமத்து செய்ய வேண்டும். குடிமராமத்து எதற்காக என்றால் தற்போது எடப்பாடி ஆட்சிக்கு எதிராக அதே கட்சியில் உள்ள எம்.எல்.ஏக்கள் கொடிப்பிடித்து வருகிறார்கள். அதனால் அவர்களை சமாதானம் செய்ய ஒவ்வொரு அ.தி.மு.க அதிருப்தி எம்.எல்.ஏவுக்கும் தான் இந்த நிதி ஒதுக்கப்பட உள்ளது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளத் தான் குடிமராமத்து என்ற பெயரில் ரூ. 449 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
குடிதண்ணீர் பிரச்சனை அதிகரித்துள்ள நிலையில் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கிடைக்கும் அவல நிலை உள்ளது. அதனால் உடனடியாக குடிதண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கஜா புயலில் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் ஒரு லட்சம் காங்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை ஒரு வீடு கூட கட்டவில்லை. அதனால் உடனடியாக வீடுகள் கட்டும் பணிகளை தொடங்குவதுடன் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை மேலும் காலங்கடத்தாமல் உடனடியாக வழங்க வேண்டும். அரயப்பட்டியில் புயலில் சாய்ந்த மின்கம்பிகளில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு புயல் நிவாரணம் வழங்குவதாக உத்தரவாதம் அளித்தது போல நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேசினார்.