தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பப்பாசி) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 47வது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. இந்த புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி விருதுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்த புத்தகக் காட்சியானது கடந்த 3 ஆம் தேதி முதல் இன்று (21.01.2024) வரை நடைபெற்றது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும் நடைபெற்றது. அதன்படி மொத்தம் 18 நாட்கள் நடைபெற்றது. நுழைவுக்கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பபாசி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “புத்தகக் காட்சிக்கு மொத்தமாக சுமார் 15 லட்சம் வாசகர்கள் வந்துள்ளார்கள். லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இலவச டிக்கெட்களை வழங்கி இருந்தோம். மேலும், சுமார் ரூ.18 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாபாசி தலைவர் கூறுகையில், “புத்தக கண்காட்சியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. வாசகர்கள் மழையிலும் கூட குடையைப் பிடித்துக்கொண்டு புத்தகக் காட்சிக்கு வந்ததிருந்தனர். மழையின் போதும் நீண்ட வரிசையில் நிற்கும் அளவுக்கு வாசகர்கள் வந்தனர். புதிய புத்தகத்தை ஒவ்வொரு பதிப்பகமும் வெளியிட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.