புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ள நோட்டுகள் அதிகம் வெளியில் சுற்றுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமயம் அருகில் உள்ள மூங்கிதானப்பட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு 16- ஆம் தேதி வந்த கீழதுருவாசகபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் மது வாங்கிக் கொண்டு இரண்டு 200 ரூபாய் நோட்டுகளைக் கொடுக்க அந்தத் தாள்கள் மீது சந்தேகப்பட்ட டாஸ்மாக் முருகானந்தம் ரகசியமாகத் திருமயம் போலீசாருக்குத் தகவல் சொல்ல அங்கு வந்த போலீசார் சந்தோஷ்குமாரைக் கைது செய்ததுடன், அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து ஒழுகப்பட்டி சின்னையா மகன் ராமச்சந்திரன், திருமயம் முகமது இப்ராகிம், நசுருதீ்ன், ஆகியோரைக் கைது செய்ததுடன், மேலும் சென்னை வில்லிவாக்கம் சுரேஷை கைது செய்து அவரிடம் இருந்த ரூ 49,900 கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் நாகர்கோயில் மணிகண்டன் என்பவரைக் கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் 64,91,540 கள்ள நோட்டுகளும், ஒரு பக்கம் மட்டும் அச்சடிக்கப்பட்ட ரூபாய் 3 லட்சத்திற்கான கள்ள நோட்டுகளையும் கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்து கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். பெரிய கள்ள நோட்டு கும்பலைக் கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்.பி. அருண்சக்தி குமார் பாராட்டினார்.
இதேபோல கொத்தமங்கலத்தில் ஒரு வங்கியில் கடந்த வாரம் ஒருவர் ரூபாய் 8 ஆயிரத்திற்கான கள்ள நோட்டுகளை வங்கியில் செலுத்தியுள்ளதாகவும் அது பற்றி வங்கி அதிகாரிகள் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க தயாராகி உள்ளதாகக் கூறப்படுகிறது.