Skip to main content

குடிதண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது... மக்கள் கடும் அவதி!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

குடிதண்ணீர் குடம் ரூ.10- க்கு வாங்கிக் கொண்டிருந்த கிராம மக்களுக்கு 20 லிட்டர் ரூ.5- க்கு (ரூ 1 க்கு) வழங்கும் திட்டம் பல இடையூறுகளுக்கு மத்தியில் பிப்ரவரி 7 ந் தேதி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்கள் ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர். ஆனால் அந்த திட்டம் படிப்படியாக முடங்கி வருவதால் பொதுமக்கள் குடிதண்ணீருக்காக தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிதண்ணீர் கொள்ளையர்களும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விலையை ஏற்றிவிட்டனர்.
 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகாவில் உள்ள கடைக்கோடி கிராமம் ஏம்பல். முழுக்க முழுக்க வானம் பார்த்த பூமி. மழைத் தண்ணீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் மக்கள். மழை பொய்த்தால் விவசாயமும் பொய்த்துப் போகும். ஆனால் குழந்தைகளை படிக்க வைத்த கிராம மக்கள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், என பல துறைகளிலும் பணியாற்றும் இளைஞர்களை உருவாக்கிவிட்டனர் கிராம மக்கள். இப்படி வளர்ந்த இளைஞர்கள் முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில் இணைந்து தங்கள் கிராமத்தை உயர்த்த வேண்டும் என்று திட்டமிட்டனர். அதற்காக பொருளாதார உதவிகளுடன் களப் பணியிலும் ஈடுபடத் தொடங்கினார்கள். 

pudukkottai district Purified Drinking Water Program machine problem

அரசுப் பள்ளியில் தொடங்கி, அரசு மருத்துவமனை, நீர்நிலைகள் சீரமைப்பு, சாலைப் பணிகள் என்று அடுத்தடுத்து பல பணிகளை சிறப்பாக செய்தனர். பல வருடங்களாக மூடிக் கிடந்த வாரச் சந்தையை திறந்து சாதித்தனர். ஒவ்வொரு பணிக்கும் அரசுக்கு விண்ணப்பித்து அவற்றை பெற்றும் கிராம வளர்ச்சிக்காக கொண்டு வந்தனர். கிராமப்புற பாலகம் திட்டம் வரை கொண்டு வந்துவிட்டார்கள். அடுத்து காதி விற்பனை நிலையம் கொண்டு வரும் முயற்சியில் உள்ளனர். 
 

இப்படி ஒரு திட்டம் தான் கிராமங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம்.. கடந்த நிதி ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 1500- க்கும் கிராமங்களில் தலா ரூ. 8 லட்சம் மதிப்பில் மணிக்கு ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கும் ஆர்.ஒ.பிளாண்ட்கள் அமைக்க அறிவிப்பு வெளியானது. அதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 68 பணிகள். அதில் ஒன்று தான் ஏம்பல் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டது. 

pudukkottai district Purified Drinking Water Program machine problem

முன்னாள் மாணவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து தொய்வின்றி பணிகள் செய்யப்பட்டு வந்த நிலையில் ஒரு சில அதிகாரிகள் அதற்கும் முட்டுக்கட்டை போட அவற்றை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்கு கொண்டு சென்று அனைத்துப் பணிகளையும் சிறப்பாக செய்து முடித்தனர்.


இந்த நிலையில் பிப்ரவரி 6 ந் தேதி சோதனை செய்யப்பட்ட நிலையில் 7 ந் தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது ரூ. 5 போட்டால் ( ரூ. 1) 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வரும். இந்த திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் இப்போது அந்த திட்டம் முடங்கி வருவது மக்களை அவதிப்பட வைத்துள்ளது.
 

இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறும் போது.. இந்த குடிதண்ணீர் சுத்திகரிப்பு திட்டம். குடிதண்ணீர் தொட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த பிளான்டில் ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வெளிவருகிறது. அதில் காசு போட்டுவிட்டு தண்ணீா் பிடித்து வந்தோம். 

pudukkottai district Purified Drinking Water Program machine problem

பிப்ரவரி முதல் வாரம் வரை ஒரு குடம் ரூ. 10 க்கு விலை கொடுத்து தனியார் தண்ணீர் லாரிகளில் தண்ணீரை வாங்கி பருகினோம். இனி ரூ. 5 க்கும், ரூ. 1 க்கும், 20 லிட்டர் தண்ணீர் பிடிக்கலாம். காசை போட்டால் 20 லிட்டர் தண்ணீர் வரும். புதுக்கோட்டை மாவட்டத்திலேயே முதல் முறையாக செயல்படத் தொடங்கிவிட்டது இந்த திட்டம் என்ற மகிழ்ச்சியில் இருந்தோம். ஆனால் திறப்பு விழா முடிந்து ஒரு வாரத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது. தற்போது ஒரு நாளைக்கே ஆயிரம் லிட்டர் கூட இந்த சுத்திகரிப்பு இயந்திரத்தால் சுத்திகரிக்க முடியவில்லை. இயந்திரம் பழுதடைந்து விட்டது. சம்மந்தப்பட்ட ஒப்பந்தக் காரர்களும் சரியான பதில் சொல்லவில்லை. சீரமைக்கவும் இல்லை. 
 

இந்த நேரம் பார்த்து கிராமத்துக்கே குடிதண்ணீர் வழங்கிய தம்மம் ஊரணியிலும் தற்போது குடிதண்ணீர் எடுக்க முடியாத நிலை உள்ளது. இந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி குடிதண்ணீரை விற்பனை செய்து வந்தவர்கள் திடீரென ரூ. 10 க்கு விற்றவர்கள் இப்போது ரூ. 16 க்கு ஒரு குடம் என்று விற்க தொடங்கிவிட்டனர். 
 

மாவட்டத்தில் முதல் திட்டம் என்பதால் உடனே சீரமைத்து சரியான அளவில் தண்ணீரை சுத்தம் செய்து வழங்கினால் தான் மக்கள் குடிதண்ணீருக்காக தடுமாறாமல் இருப்பார்கள் என்றனர்.
 

தமிழ்நாட்டில் பல இடங்களில் குடிதண்ணீரை அனுமதி இன்றி உறிஞ்சி எடுத்து விற்பனை செய்யப்பட்ட பல ஆழ்குழாய் கிணறுகள் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆவுடையார்கோயில், மணமேல்குடி, அறந்தாங்கி ஒன்றியங்களில் தண்ணீர் விற்பனை அமோகம். 

 

சார்ந்த செய்திகள்