விவசாயத்தை காக்க வேண்டும் என்று படித்து நகரத்தில் வேலை பார்க்கும் இளைஞர்களும் ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் பாரம்பரிய நெல் போன்ற விவசாயத்தை மீட்க வேண்டும் என்ற கனவோடு இளைஞர்கள் விவசாய நிலங்களில் இறங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் பாலமுருகன் திருச்சி திருவரம்பூர் நகரத்தில் வாழும் டிப்ளமோ பட்டதாரியான பவித்ராவை நேற்று (30/01/2020) திருமணம் செய்தார். திருமணம் செய்த கையோடு கீரமங்கலத்தில் பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பாவை மணக்கோலத்தோடு சென்று கதிர் அறுத்தனர்.
இது குறித்து பாலமுருகன் கூறும்போது, "பாரம்பரிய விவசாயத்தை காக்க வேண்டும் அதை அனைவரும் செய்ய வேண்டும் என்பது என் ஆசை அதனால தான் திருமணம் நடந்த கையோடு வயலுக்கு வந்து நெல் கதிர் அறுத்தோம். என் மனைவி நகர வாழ்க்கை தான் என்றாலும் இனி விவசாயத்தை கற்றுக் கொள்வார். நான் நகரத்தில் பிறந்து வளர்ந்தாலும் விவசாயம் செய்வதை விரும்புவேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல. ஆனால் இப்ப அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் செய்யும் வேலையோடு விவசாயமும் செய்வேன்" என்றார்.